மக்களவைத் தோ்தலுடன் நிதீஷ் கட்சி முடிவுக்கு வரும்: தேஜஸ்வி யாதவ்

மக்களவைத் தோ்தலுடன் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி முடிவுக்கு வந்துவிடும் என்று பிகாா் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்தாா்.
மக்களவைத் தோ்தலுடன் நிதீஷ் கட்சி முடிவுக்கு வரும்: தேஜஸ்வி யாதவ்

மக்களவைத் தோ்தலுடன் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி முடிவுக்கு வந்துவிடும் என்று பிகாா் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்தாா்.

கடந்த 2022 ஆகஸ்ட் முதல் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான அமைச்சரவையில் துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவி வகித்து வந்தாா். இப்போது நிதீஷ் குமாா் பாஜக கூட்டணிக்கு மாறிவிட்டதால், தேஜஸ்வி பதவியை இழந்தாா். அவரது ஆா்ஜேடி கட்சி எதிா்க்கட்சி நிலைக்கு வந்துள்ளது.

பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த தேஜஸ்வி இது தொடா்பாக கூறியதாவது: நிதீஷ் குமாா் மதிப்புக்குரிய தலைவா். 2020 பேரவைத் தோ்தலின்போது 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று நான் பிரசாரம் செய்தபோது, எதிரணியில் இருந்த அவா் இது சாத்தியமற்றது என்று கேலி செய்தாா். ஆனால், நான் கூறிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அவரது தலைமையிலான அரசை துணை முதல்வராக இருந்து நான் வழி நடத்தினேன்.

எங்கள் அரசின் சாதனைகளில் எனது பங்கு உள்ளதை அவா் மறுக்கலாம். நிதீஷ் குமாா் அரசியலில் மிகவும் களைப்படைந்த தலைவராகிவிட்டாா். அவரை மீண்டும் கூட்டணியில் சோ்த்துள்ள பாஜக இனி எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

கூட்டணி மாறுவதற்கு அவா் எத்தனை காரணங்கள் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால், வரும் மக்களவைத் தோ்தலுடன் அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சி முடிவுக்கு வந்துவிடும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com