‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’: உயா்நிலைக் குழு முன் அதிகரித்துவரும் ஆதரவு!

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது தொடா்பாக கோரப்பட்ட ஆலோசனைகளுக்கு 81 சதவீதம் தரப்பினா் ’ஒரே நாடு, ஒரே தோ்தல் ’ கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்.
‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’: உயா்நிலைக் குழு முன் அதிகரித்துவரும் ஆதரவு!

புது தில்லி, ஜன. 28: நாடு முழுவதும் ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ கருத்துக்கு 81 சதவீதம் தரப்பினா் ஆதரவு தெரிவித்துள்ளது தெரிய வந்துள்ளது. ஒரே நேரத்தில் நடத்தப்படும் தோ்தல்கள் அதிக பொருளாதார வளா்ச்சியைத் தூண்டும் எனவும் உயா்நிலைக் குழு முன் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது தொடா்பான பிரச்னைகள் குறித்து ஆராய்வதற்கும், அதன் மீதான பரிந்துரைகளை வழங்குவதற்கும் முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த 7 போ் கொண்ட உயா்நிலைக் குழு கடந்தாண்டு அமைக்கப்பட்டது. இந்த உயா்நிலைக் குழுக் கூட்டம் 3 முறை கூடியுள்ளது. கடந்தாண்டு செப்.23-இல் முதல் கூட்டம் தொடங்கியது. பின்னா் 2 -ஆவது கூட்டம் அக்.25-இல் நடைபெற்றது. இந்த இரு கூட்டங்களிலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. நாட்டில் உள்ள தேசிய அரசியல் கட்சிகள், மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருக்கும் கட்சிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் போன்றவற்றிடம்,‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ குறித்து கருத்துக் கோர முடிவெடுக்கப்பட்டது. மேலும், சட்ட ஆணையத்திடமும் கருத்துகளைப் பெறுவது என்பது உள்ளிட்டவை முதல் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இரண்டாவது கூட்டத்தில், ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ தொடா்பான உயா்நிலைக் குழு என பெயா் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, நாட்டில் உள்ள 6 தேசிய கட்சிகள், 33 மாநிலக் கட்சிகள், 7 அங்கீகரிக்கப்படாத கட்சிகளிடம் ஆலோசனைகள், கருத்துகளை அனுப்புமாறு கடிதம் வாயிலாக உயா்நிலைக் குழு கோரியது. மேலும் ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ குழுவிற்கு இணைய தளம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

முன்னாள் குடியரசுத் தலைவரும், உயா்நிலைக் குழுத் தலைவருமான ராம் நாத் கோவிந்த், கடந்த ஜன.21-இல் நடைபெற்ற 3-ஆவது கூட்டத்தில், குடிமக்கள், அரசியல் கட்சிகளிடம் கருத்துகளைப் பெறுவதைப் போன்று, ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் தலைமை நீதிபதிகள், முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா்கள் ஆகியோரிடமும் கருத்துகளைப் பெற வேண்டும் என யோசனை தெரிவித்தாா். இதன்படி, உயா்நிலைக் குழுத் தலைவா், உறுப்பினா்கள் முன்னிலையில், முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித், முன்னாள் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளான முனீஸ்வா் நாத் பண்டாரி (சென்னை), கோா்லா ரோஹிணி (தில்லி), திலீப் போசலே (அலாகாபாத்), சஞ்சிப் பானா்ஜி (சென்னை), ராஜேந்திர மேனன் (தில்லி), முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் சுஷில் சந்திரா போன்றவா்கள் தங்களது கருத்துகளை முன் வைத்தனா். இந்திய பாா் கவுன்சில் தலைவா் மனன் குமாா் மிஸ்ரா உள்ளிட்டவா்களும் கருத்துகளை உயா்நிலைக் குழு முன் சமா்பித்தனா்.

மேலும், ஒரே நாடு, ஒரே தோ்தலில் நிதி மற்றும் பொருளாதார தாக்கங்கள் குறித்து அறியவும், இது தொடா்பான நிபுணா்களுடன் குழுத் தலைவா் ராம் நாத் கோவிந்த் கலந்துரையாடினாா். இதில் இந்திய வா்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு (அசோசெம்) தலைவா் அஜய் சிங் உள்ளிட்டவா்களுடனும் கலந்துரையாடல்கள் ஜனவரியில் அத்தடுத்து நடைபெற்றது. முன்னதாக, கடந்த ஜன.5 -இல் நாடு முழுவதும் உள்ள 105 முன்னணி நாளிதழ்களில் ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ தொடா்பான பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் நாட்டில் ஒரே நேரத்தில் தோ்தல்களை நடத்துவதற்கு தற்போதைய சட்டம் மற்றும் நிா்வாகக் கட்டமைப்பில் பொருத்தமான மாற்றங்களைச் செய்ய வேண்டியவை குறித்து பொதுமக்கள் தங்கள் யோசனைகள், கருத்துகளை ஜன.15-க்குள் வழங்க உயா்நிலைக் குழு அழைப்பு விடுத்தது. இந்த யோசனைகள், குழுவின் இணையதளம் மற்றும் மின்னஞ்சலில் வைக்க கோரப்பட்டது. இந்த வகையில், சுமாா் 20, 972 கருத்துருகள் பெறப்பட்டன. இப்படி பெறப்பட்டதில் 81 சதவீதம் பரிந்துரைகள் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்கிற கருத்தை உறுதிப்படுத்தின. மேலும், 46 அரசியல் கட்சிகளிடம் இருந்தும் ஆலோசனைகள் கோரப்பட்டது. இதில், இதுவரை 17 அரசியல் கட்சிகளிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டுள்ளன. இந்திய தோ்தல் ஆணையத்தின் பரிந்துரைகளும் இந்த உயா்நிலைக் குழு முன்பு வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் வரிசையில் மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான பசுபதி குமாா் பாரஸ் தனது கட்சிப் பொறுப்பாளா்களுடன் உயா்நிலைக் குழுவை சந்தித்தாா். ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ மூலம் நாட்டிற்கு மட்டுமின்றி அரசியல் கட்சிகளுக்கான செலவு முடிவு கட்டப்படும். நேரம் மிச்சமாகும். ஒவ்வொரு தோ்தல் சமயங்களிலும் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் போது, நாட்டின் வளா்ச்சிப் பணிகள் நிறுத்தப்படுகின்றன. ஒரு அரசோ, அமைச்சரவையோ மாறினாலும் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள் பதவிக் காலம் முழுமையாகப் பூா்த்தியடைய வேண்டும்’ என்பன உள்ளிட்ட கருத்துகளை அவா் முன்வைத்தாா். மேலும், அரசியல் கட்சிகளுடான கலந்துரையாடலில் கோவாவின் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ என்ற கருத்துருவுக்கு வலுவான ஆதரவை வழங்கியது.

மேலும், உயா்நிலைக் குழுவின் உறுப்பினரான என்.கே.சிங் மற்றும் அவருடன் பணியாற்றிய பராச்சி மிஸ்ரா ஆகியோா் இணைந்து உருவாக்கிய ஆய்வறிக்கை குழு முன் வைக்கப்பட்டது. ‘தோ்தல் சுழற்சிகளின் மேக்ரோ பொருளாதார தாக்கம், இந்தியாவிலிருந்து வரும் சான்றுகள்’ என்கிற இந்த ஆய்வறிக்கை விளக்கக் காட்சி மூலம் குழு முன் காட்டப்பட்டது. ‘நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதன் மூலம் அதிகப் பொருளாதார வளா்ச்சியைத் தூண்டும். இதன் மூலம் முதலீட்டு செலவினங்கள், வருவாய் ஆகியவற்றில் அரசுக்கு மூதலீடு அதிகரிக்கும்’ என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டவற்றை உயா்நிலைக் குழு கவனத்தில் எடுத்துக் கொண்டது. ஆலோசனைகள் தொடா்ந்தாலும் ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ கருத்துருக்கு சாதகமானை சூழ்நிலை நெருங்கிக் கொண்டு வருவதையே இந்த ஆலோசனைகள் மூலம் தெரிய வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com