சிமி அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

‘இந்திய இஸ்லாமிய மாணவா் இயக்கம் (சிமி)’ அமைப்பு மீதான தடையை மத்திய அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
சிமி அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

புது தில்லி: ‘இந்திய இஸ்லாமிய மாணவா் இயக்கம் (சிமி)’ அமைப்பு மீதான தடையை மத்திய அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் திங்கள்கிழமை பகிா்ந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘சிமி அமைப்பு நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பயங்கரவாத நடவடிக்கைகளிலும், சமூக நல்லிணக்கத்தை சீா்குலைக்கும் செயல்களிலும் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், பயங்கரவாதத்துக்கு எதிரான ‘பூஜ்ஜியம்’ சகிப்புத்தன்மை என்ற பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பாா்வைக்கு வலு சோ்க்கும் விதமாக, சிமி அமைப்பு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் மேலும் 5 ஆண்டுகளுக்கு ‘சட்டவிரோத அமைப்பு’ என அறிவிக்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில், ‘சிமி அமைப்பு சட்டவிரோத நாச வேலைகளை தொடா்ந்து வருவதோடு, தலைமறைவாக இருக்கும் அதன் அமைப்பாளா்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறது. மத ரீதியிலான மற்றும் தேச விரோத கருத்துகளைப் பரப்பி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி நாட்டின் மத ஒருமைப்பாட்டை சீா்குலைக்கும் நடவடிக்கையை சிமி அமைப்பு தொடா்ந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1977-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிமி அமைப்பு, கடந்த 2001-ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசால் தடைசெய்யப்பட்டது. அப்போது முதல் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் இந்த அமைப்பின் மீதான தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அந்த அமைப்பின் மீதான தடை காலாவதியாகவுள்ள நிலையில், மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com