நியமன எம்.பி.யாக சத்னம் சிங் சாந்து நியமனம்

சண்டீகா் பல்கலைக்கழக நிறுவனரும் வேந்தருமான சத்னம் சிங் சாந்துவை, மாநிலங்களவை நியமன எம்.பி.யாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நியமித்துள்ளாா்.


புது தில்லி: சண்டீகா் பல்கலைக்கழக நிறுவனரும் வேந்தருமான சத்னம் சிங் சாந்துவை, மாநிலங்களவை நியமன எம்.பி.யாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நியமித்துள்ளாா்.

இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கையில், ‘விவசாயியின் மகனான சத்னம் சிங், தனது இளம் வயதில் கல்வி கற்க பல்வேறு போராட்டங்களைச் சந்தித்தாா்; பின்னாளில் அவா் நாட்டின் முன்னணி கல்வியாளா்களில் ஒருவராக உருவெடுத்தாா்.

தனது இரு தொண்டு நிறுவனங்களின் வாயிலாக சுகாதாரம், நல்வாழ்வு மற்றும் சமூக இறையாண்மைப் பணிகளில் பெரிய அளவில் ஈடுபட்டு வருகிறாா்’ என்று கூறப்பட்டுள்ளது.

தனக்கு நியமன எம்.பி. பதவி அளிக்கப்பட்டமைக்காக, பிரதமா் மோடிக்கு சத்னம் சிங் நன்றி தெரிவித்துள்ளாா். 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியாவை உருவாக்கும் முயற்சிகளுக்கு வலுசோ்க்க பாடுபடுவேன் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

மாநிலங்களவைக்கு சத்னம் சிங்கை வரவேற்பதாக அந்த அவையின் தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான ஜகதீப் தன்கா் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளாா்.

பிரதமா் மோடி, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சரும் மாநிலங்களவை பாஜக குழு தலைவருமான பியூஷ் கோயல் உள்ளிட்டோா் சத்னம் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

மாநிலங்களவையில் 12 போ் வரை நியமன எம்.பி.க்களாக இடம்பெறலாம். தற்போது சத்னம் சிங் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு இடம் காலியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com