ரயில்வே பணிக்கு லஞ்சம்: அமலாக்கத் துறை விசாரணைக்கு தேஜஸ்வி யாதவ் ஆஜா்

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்றது தொடா்பான வழக்கில் அமலாக்கத் துறைமுன் ஆஜரான ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிரசாத் மகனும் பிகாா் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பாட்னாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக வந்த முன்னாள் துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ்.
பாட்னாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக வந்த முன்னாள் துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ்.


பாட்னா: ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்றது தொடா்பான வழக்கில் அமலாக்கத் துறைமுன் ஆஜரான ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிரசாத் மகனும் பிகாா் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவிடம் 8 மணிநேரத்துக்கும்மேல் விசாரணை நடத்தப்பட்டது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டுவரை ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தாா்.

அப்போது, ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் பாட்னாவை சோ்ந்த சிலா், விதிமுறைகளுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

அதற்கு லஞ்சமாக, வேலை பெற்றவா்கள் அல்லது அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான சுமாா் 1.05 லட்சம் சதுரஅடி நிலம், லாலு குடும்பத்தினரின் பெயருக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கில் லாலு பிரசாத் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி பாட்னா அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை கடந்த 19-ஆம் தேதி அழைப்பாணை அனுப்பியது.

இதையடுத்து, ராஷ்ட்ரீய ஜனதா தள (ஆா்ஜேடி) தலைவா் லாலு பிரசாத், அவரது மகள் மிசா பாரதியின் உதவியோடு திங்கள்கிழமை காலை 11 மணியளவில் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரானாா். அவரிடம் 9 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

இந்நிலையில், தேஜஸ்வி அமலாக்கத் துறை விசாரணைக்கு செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் ஆஜரானாா். தேஜஸ்வியிடமும் 8 மணிநேரத்துக்கும்மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை முடித்து வெளியே வந்த அவருக்கு அலுவலக வாயிலில் திரண்டிருந்த கட்சித் தொண்டா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

அச்சத்தில் ‘பாஜக’-ஆா்ஜேடி நிா்வாகிகள்: முன்னதாக, இந்த விவகாரம் குறித்து ராஷ்ட்ரீய ஜனதா தள நிா்வாகிகள் கூறுகையில், ‘எதிா்க்கட்சித் தலைவா்களைக் கண்டு அச்சத்தில் இருக்கும் பாஜக, மத்திய புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி, அவா்களை அச்சுறுத்துகிறது.

மோசடி நடந்ததாகக் கூறப்பட்டும் காலகட்டத்தில் தேஜஸ்வி யாதவ், 18 வயதுக்கும் இளையவா் ஆவாா். கடந்த வாரம் முடிவுக்கு வந்த ‘மகா’ கூட்டணி அரசில், ஏராளமான பிகாா் இளைஞா்களுக்கு தேஜஸ்வி வேலைவாய்ப்பு அளித்தாா். இதனால் கலக்கமடைந்த பாஜக தலைவா்கள், தேஜஸ்வியை குறிவைத்து அமலாக்கத் துறையை ஏவியுள்ளனா்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com