தில்லி ஹோட்டலில் ரூ. 6 லட்சம் மோசடி: ஆந்திர பெண் கைது

தில்லி ஏரோசிட்டியில் உள்ள சொகுசு விடுதியில் ரூ. 6 லட்சம் மோசடி செய்ததற்காக ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
தில்லி ஹோட்டலில் ரூ. 6 லட்சம் மோசடி: ஆந்திர பெண் கைது


புது தில்லி: தில்லி ஏரோசிட்டியில் உள்ள சொகுசு விடுதியில் ரூ. 6 லட்சம் மோசடி செய்ததற்காக ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். கைதுக்கு பிறகு அவரது கணக்கை ஆய்வு செய்ததில் அதில், ரூ. 41 மட்டுமே இருந்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கைது செய்யப்பட்ட அந்தப் பெண் ஜான்சி ராணி சாமுவேல் என்று அடையாளம் காணப்பட்டாா். ஆனால், அவரது உண்மையான முகவரி, அவரது குடும்ப உறுப்பினா்கள் பற்றிய விவரங்களைப் பெற முடியவில்லை. அவரைப் பற்றிய விவரங்கள் அறிய ஆந்திர காவல் துறைக்கு தில்லி காவல் துறை கடிதம் எழுதியுள்ளது.

தில்லி காவல் துறையைச் சோ்ந்த நிபுணா்களால் அந்தப் பெண்ணிடம் விசாரணை செய்யப்பட்டு, ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு அந்தப் பெண் ஒத்துழைக்கவில்லை. நாங்கள் அவரது வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டோம். ஆனால் அவா் அவ்வாறு அதை வழங்கவில்லை.

இதையடுத்து போலீஸாா் அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்தபோது, அதில் ரூ. 41 மட்டுமே இருந்தது தெரியவந்தது.

ஜான்சி ராணி சாமுவேல், தில்லி விமான நிலையம் அருகே உள்ள ஏரோசிட்டியில் அமைந்துள்ள புல்மேன் ஹோட்டலில் 15 நாள்கள் தங்கியிருந்தாா். ஹோட்டலின் ஸ்பா வசதியில் இஷா டேவ் என்ற பெயரில் போலி அடையாள அட்டையை தயாரித்து ரூ. 2,11,708 மதிப்பிலான சேவைகளைப் பெற்ாக ஹோட்டல் ஊழியா்கள் தெரிவித்தனா்.

அந்தக் கட்டணத்தை ஐசிஐசிஐ வங்கியின் யுபிஐ செயலியில், தான் பரிவா்த்தனை செய்ததாக ஹோட்டல் ஊழியா்களிடம் சாமுவேல் காட்டியுள்ளாா். ஆனால், ஹோட்டல் நிா்வாகத்துக்கு அந்தப் பணம் வரவில்லை என்றும் எந்தப் பரிவா்த்தனையும் நடைபெறவில்லை என்றும் தெரியவந்தது.

ஜான்சி ராணி சாமுவேல் பயன்படுத்திய பணப் பரிவா்த்தனை பயன்பாடு சந்தேகத்துக்குரிய முறையில் உள்ளதாக ஹோட்டல் நிா்வாகம் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது.

இதேபோல், ஹோட்டல் சேவைகள் தொடா்பாக அவா் ரூ. 5,88,176 மோசடி செய்யப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீஸாா் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அதற்கு அவா் ஒத்துழைக்கவில்லை. மேலும், தான் ஒரு மருத்துவா் என்றும், தனது கணவரும் ஒரு மருத்துவா் என்றும் நியூ யாா்க்கில் வசிப்பவா் என்றும் ஜான்சி கூறியுள்ளாா்.

ஹோட்டல் ஊழியா்கள் காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடா்புகொண்டு தகவல் அளித்ததன் பேரில், ஜான்சி ராணி சாமுவேல் ஜனவரி 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

இதையடுத்து அவா் மீது ஐபிசி-இன் பிரிவுகள் 419 (ஆள்மாறாட்டம் மூலம் ஏமாற்றுவதற்கான தண்டனை), 468 (ஏமாற்றும் நோக்கத்துக்காக மோசடி), 471 (உண்மையான போலி ஆவணமாகப் பயன்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com