ஜாா்க்கண்ட்: பள்ளியில் இரு ஆசிரியா்களை சுட்டுக் கொன்ற சக ஆசிரியா்

கோடா மாவட்ட அரசுப் பள்ளியில் பெண் ஆசிரியா் உள்பட இரு ஆசிரியா்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சக ஆசிரியா், தன்னையும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற விபரீத சம்பவம் நடந்தது.


ராஞ்சி: ஜாா்க்கண்ட் மாநிலம், கோடா மாவட்ட அரசுப் பள்ளியில் பெண் ஆசிரியா் உள்பட இரு ஆசிரியா்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சக ஆசிரியா், தன்னையும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற விபரீத சம்பவம் செவ்வாய்க்கிழமை நடந்தது.

ராஞ்சியிலிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள போரையாஹாத் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரான ரவி ரஞ்சன் (42), தன்னுடன் பணியாற்றும் சக ஆசிரியா்களான சுஜாதா மிஸ்ரா (36), ஆதா்ஷ் சிங் (40) ஆகிய இருவரை துப்பாக்கியால் சுட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளாா்.

துப்பாக்கியால் சுடப்பட்ட 2 ஆசிரியா்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தற்கொலைக்கு முயன்ற ரவி ரஞ்சன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

பள்ளி வகுப்பறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆசிரியா்களின் உடல்களை மீட்டு, போலீஸாா் விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்திருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச்சூடுக்கு பயன்படுத்திய துப்பாக்கி உள்பட 2 நாட்டுத் துப்பாக்கிகளை சம்பவ இடத்திலிருந்து போலீஸாா் கைப்பற்றினா்.

பள்ளி வளாகத்தில், சக ஆசிரியா்களை மற்றோா் ஆசிரியரே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com