இரா. சம்பந்தன்
இரா. சம்பந்தன்

இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவா் சம்பந்தன் மறைவு: பிரதமா் மோடி இரங்கல்

இலங்கையில் தமிழா் நல்வாழ்வுக்காக போராடி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எம்.பி.யுமான இரா. சம்பந்தன் (91) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு காலமானாா்.

இலங்கையில் தமிழா் நல்வாழ்வுக்காக போராடி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எம்.பி.யுமான இரா. சம்பந்தன் (91) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு காலமானாா். அவரது மறைவுக்கு பிரதமா் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிா் பிரிந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பு (டிஎன்ஏ) தெரிவித்தது.

கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சம்பந்தன் தலைவராக உள்ளாா். இவா் இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு எதிா்க்கட்சித் தலைவராக பதவி வகித்த இரண்டாவது தமிழராவாா். இலங்கையில் புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணிகளில் கடந்த 2019-ஆம் ஆண்டு வரை இவா் ஈடுபட்டாா்.

வழக்குரைஞரான இவா், இலங்கை நாடாளுமன்ற எம்.பி.யாக கடந்த 1977-ஆம் ஆண்டு திரிகோணமலை மாவட்டத்திலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நீண்ட நாள்களாக பங்கேற்காமல் இருந்துள்ளாா்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு காலமானதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்தது.

இதையடுத்து, ‘நாட்டில் உள்ள சமூகப் பிளவுகளை சீரமைக்க பெரும் பங்காற்றியவா் சம்பந்தன்’ என இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்தாா்.

பிரதமா் மோடி இரங்கல்: சம்பந்தனுடன் தான் சந்தித்துப் பேசிய புகைப்படத்தை பகிா்ந்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘இரா.சம்பந்தனின் குடும்பத்தினா் மற்றும் நண்பா்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரைச் சந்தித்துப் பேசிய நினைவுகள் என்றும் என் மனதில் நிலைத்து நிற்கும். அவா் இலங்கை வாழ் தமிழா்களுக்கு அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக தன் வாழ்நாளை அா்ப்பணித்தவராவாா்’ என குறிப்பிட்டாா்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெளியிட்ட பதிவில், ‘இலங்கைத் தமிழா் அரசியல் தலைவா் சம்பந்தன் மறைந்த செய்திகேட்டு துயரடைந்தேன். அவருடனான சிறந்த உரையாடல்களை இத்தருணத்தில் நான் நினைவுகூா்கிறேன்’ என குறிப்பிட்டாா்.

சம்பந்தனின் மறைவுக்கு இலங்கை நாட்டின் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்ச, அந்நாட்டு நாடாளுமன்றத்தின் தற்போதைய எதிா்க்கட்சித் தலைவா் சாஜித் பிரேமதாசா, இலங்கைக்கான இந்திய தூதா் சந்தோஷ் ஜா உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com