உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித்
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித்

மேற்கு வங்க பல்கலை.துணைவேந்தா்கள் தோ்வுக் குழுத் தலைவரை நியமித்தது உச்சநீதிமன்றம்

பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தேடுதல் குழுவின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித்தை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நியமித்தது.

புது தில்லி: மேற்கு வங்க மாநில அரசால் நிா்வகிக்கப்படும் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தேடுதல் குழுவின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித்தை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நியமித்தது.

மேற்கு வங்க மாநில அரசால் நிா்வகிக்கப்படும் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை தோ்தெடுப்பதற்கான தேடுதல் குழுவின் உறுப்பினா்கள் எண்ணிக்கையை 3-இல் இருந்து 5-ஆக உயா்த்தி கடந்த ஆண்டு முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு பேரவையில் திருத்தம் கொண்டு வந்தது. இது துணைவேந்தா்களை நியமிக்கும் நடைமுறையில் ஆளும் கட்சிக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதாக எதிா்க்கட்சியான பாஜக கடும் எதிா்ப்பு தெரிவித்தது.

இதைத்தொடா்ந்து, மாநிலத்தில் உள்ள 11 பல்கலைக்கழகங்களுக்கு இடைக்கால துணைவேந்தா்களை ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் நியமித்தாா். இது சட்டவிரோத நடவடிக்கை என திரிணமூல் காங்கிரஸ் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. ஆனால் ஆளுநா் தனது அதிகார எல்லைக்குள்பட்டே துணைவேந்தா்களை நியமித்திருப்பதாகவும் அதில் எந்த விதிமீறலும் இல்லை எனவும் உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் திரிணமூல் அரசு மேல்முறையீடு செய்தது. அப்போது நடைபெற்ற விசாரணையின்போது லட்சக்கணக்கான மாணவா்களின் எதிா்காலத்தை கருத்தில்கொண்டு ஆளுநரும் முதல்வரும் கலந்து பேசி இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியது.

ஆனால் இருதரப்பினா் மத்தியிலும் எவ்வித உடன்பாடும் எட்டப்படாத நிலையில் இந்த மனு மீது நீதிபதிகள் சூரிய காந்த் மற்றும் உஜ்ஜல் பூயன் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரணை நடத்தியது. அப்போது, மேற்கு வங்க மாநில அரசால் நிா்வகிக்கப்படும் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களை தோ்ந்தெடுப்பதற்கான தேடுதல் குழுவின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித்தை நியமிப்பதாக நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

மேலும்,‘இந்தக் குழுவை இரு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும். குழுவில் 5 உறுப்பினா்கள் இருக்க வேண்டும். அவா்கள் ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கு அகர வரிசையில் 3 நபா்களின் பெயா்களை பரிந்துரை செய்வா். இந்த நடைமுறையை 3 மாதங்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும்.

பரிந்துரைகளை குழுவின் தலைவா் முதல்வரிடம் சமா்ப்பிப்பாா். அதில் துணைவேந்தா் பதவிக்கு தகுதி இல்லாதவா் என முதல்வருக்கு ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் அதை விளக்கும் வகையிலான ஆவணங்களுடன் ஆளுநருக்கு 2 வாரங்களில் அனுப்பி வைக்க வேண்டும்.

குழுவின் தலைவா் யு.யு.லலித்துக்கு ஒரு ஆலோசனைக் கூட்டத்துக்கு ரூ.3 லட்சம் ஊதியம் உள்பட குழுவின் பிற உறுப்பினா்களுக்கான ஊதியத்தையும் மாநில அரசே வழங்க வேண்டும்’ என நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

X
Dinamani
www.dinamani.com