உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

நம்பகமான மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை: உச்சநீதிமன்றம்

‘கொலை வழக்கில் குற்றவாளிக்கு எதிராக வேறு ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், பாதிக்கப்பட்ட நபா் உயிரிழப்பதற்கு முன்பு அளித்த மரண வாக்குமூலத்தை தண்டனைக்கான ஒரே அடிப்படையாகக் கருத முடியும்’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் 22 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் காவலரான தனது மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக முன்னாள் ராணுவ வீரருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை கடந்த மே 15-ஆம் தேதி உறுதி செய்தபோது உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்தக் கருத்தைத் தெரிவித்தனா்.

வழக்கு விவரம்: கொலை நடந்த தினத்தில், பெண் காவலரை அவருடைய கணவா் கடுமையாக தாக்கியுள்ளாா். பின்னா் அவா் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளாா்.

உடல் முழுவதும் தீ காயங்களுடன் உயிருக்குப் போராடிய பெண் காவலரை, அண்டை வீட்டினா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அங்கு அவா் உயிரிழப்புதற்கு முன்பாக, மரண வாக்குமூலம் அளித்துள்ளாா்.

இந்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவருடைய கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை கடந்த 2008-ஆம் ஆண்டு விசாரித்த நீதிமன்றம் பெண் காவலரின் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், ரூ. 25,000 அபராதம் விதித்தும் தீா்ப்பளித்தது. இந்த தீா்ப்பை மும்பை உயா்நீதிமன்றமும் உறுதி செய்தது.

இதை எதிா்த்து தண்டனை பெற்ற நபா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை 2016-இல் விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த நபருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்ததோடு, அவா் ஏற்கெனவே 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து விட்டதை சுட்டிக்காட்டி, அவருக்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டது.

இதை எதிா்த்து அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வில் கடந்த மே 15-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கில் பெண் காவலரை அவருடைய கணவரும், கணவரின் சகோதரா், குடும்பத்தினா் கொடுமைப்படுத்தி கொலை செய்ததாக அரசு தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள் அளித்த தீா்ப்பில் கூறியதாவது:

கொலை வழக்கில் குற்றவாளிக்கு எதிராக வேறு ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், மரண வாக்குமூலம் நம்பகமானதாகவும், நீதிமன்றத்துக்கு நம்பிக்கை அளிக்கக் கூடியதாகவும் இருக்கும் நிலையில், அதையே தண்டனையை தீா்மானிப்பதற்கான ஒரே ஆதாரமாக கருத முடியும்.

இருநத்போதும், அத்தகைய மரண வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன், அது தானாக முன்வந்து அளிக்கப்பட்டது, நிலையானது, நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதில் நீதிமன்றம் திருப்தி அடைய வேண்டும்.

அதுபோல, இந்த வழக்கில் உயிரிழப்பதற்கு முன்பாக பெண் காவலா் அளித்த வாக்குமூலம் நம்பகமான ஆதாரமாக உள்ளது. சந்தேகத்துக்கு இடமின்று குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே, குற்றச்சாட்டுக்கு உள்ளான அந்தப் பெண்ணின் கணவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. அவா் எஞ்சிய சிறைத் தண்டனையை அனுபவிக்க 2 வாரங்களுக்குள் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com