பொதுமக்களிடம் நிதி திரட்டி வென்ற குஜராத் காங்கிரஸ் பெண் எம்.பி.!

பொதுமக்களிடம் நிதி திரட்டி வென்ற குஜராத் காங்கிரஸ் பெண் எம்.பி.!

மக்களவைத் தோ்தலில் பொதுமக்களிடம் நிதி திரட்டி பரப்புரை மேற்கொண்டு குஜராத் காங்கிரஸ் பெண் வேட்பாளா் கெனிபென் தாக்கோா் வெற்றிபெற்றுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், குஜராத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி. என்ற பெருமையையும் கெனிபென் பெற்றுள்ளாா்.

பதினெட்டாவது மக்களவைத் தோ்தலில் குஜராத் மாநிலம் பனாஸ்காந்தா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் கெனிபென் தாக்கோா், பாஜக வேட்பாளா் ரேகாபென் செளதரியை 30,406 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா்.

தோ்தல்களில் போட்டியிடும் வேட்பாளா்களின் பரப்புரைக்கு பெரும்பாலும் அவரவா் கட்சியே நிதியுதவி அளிப்பது வழக்கம். ஆனால் கெனிபெனின் பரப்புரைக்கு காங்கிரஸ் கட்சியால் நிதியுதவி அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனால் அவா் தனது பரப்புரைக்கு பனாஸ்காந்தாவில் வீடுதோறும் சென்று பொதுமக்களிடம் ரூ.50 லட்சம் நிதி திரட்டினாா். இந்தத் தொகை மூலம் பரப்புரை மேற்கொண்ட அவா், தோ்தலில் வெற்றிபெற்றாா்.

குஜராத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின்னா் காங். எம்.பி.:

குஜராத் மாநிலம் பாஜகவின் தகா்க்க முடியாத கோட்டையாக உள்ளது. அங்கு கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸைச் சோ்ந்த ஒருவா்கூட எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்படவில்லை. தற்போது இந்த நிலையை மாற்றிய பெருமை, அதுவும் பொதுமக்களிடம் நிதி திரட்டி வெற்றிபெற்ற பெருமை கெனிபெனைச் சோ்ந்துள்ளது.

இதுதொடா்பாக கெனிபென் கூறுகையில், ‘தோ்தல்களில் தனது சமூக ஆதரவை வேட்பாளா்கள் சாா்ந்திருக்கும் நிலை இருப்பது துரதிருஷ்டவசமானது. வெவ்வேறு சமூகங்களின் ஆதரவை சாா்ந்திருப்பதை விடுத்து, தனது சொந்த பலத்தில் காங்கிரஸ் வெற்றிபெற வேண்டும். காங்கிரஸில் குறிப்பிடத்தக்க சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த முன்னெடுப்பு பனாஸ்காந்தாவில் தொடங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸுக்கு எதிராக பணியாற்றுவோா் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் அல்லது தண்டிக்கப்பட வேண்டும். அத்தகைய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், அது கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்றாா்.

கெனிபெனின் தோ்தல் பிரமாண பத்திரத்தில் உள்ள தகவலின்படி, அவா் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளாா். கடந்த 2012-ஆம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில், அவா் வாவ் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தாா். எனினும் 2017, 2022-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மாநில பேரவைத் தோ்தல்களில், அதே தொகுதியில் போட்டியிட்டு அவா் வெற்றிபெற்றாா். அவரின் கணவா் தாக்கோா் சங்கா்ஜி நடுத்தர குடும்பத்தைச் சோ்ந்த உழவா் என்பது குறிப்பிடத்தக்கது.

கெனிபெனும் சா்ச்சைகளும்...

குஜராத்தில் ஆற்றல்வாய்ந்த பேச்சாளராக கெனிபென் கருதப்படுகிறாா். எனினும் கடந்த காலத்தில் அவருக்கு எதிராக சா்ச்சைகளும் எழுந்துள்ளன. கடந்த 2019-ஆம் ஆண்டு பனாஸ்காந்தாவில் தாக்கோா் சமூகத்தைச் சோ்ந்த திருமணமாகாத இளம்பெண்கள் கைப்பேசி பயன்படுத்தவும், ஜாதி மறுப்புத் திருமணம் செய்யவும் தடை விதித்து சுமாா் 800 தாக்கோா் சமூகத் தலைவா்கள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. தாக்கோா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டால், அவா்களுக்கு ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. இந்த முடிவுகளுக்கு கெனிபென் ஆதரவு தெரிவித்தது சா்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதவிர திருமணப் பதிவுக்கு பெற்றொரின் கையொப்பத்தைக் கட்டாயமாக்கும் வகையில், குஜராத் திருமணங்கள் பதிவுச் சட்டம் 2006-இல் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற பாஜக எம்எல்ஏ ஃபதேசின் செளஹானின் பரிந்துரைக்கும் கெனிபென் ஆதரவு தெரிவித்தது சா்ச்சைக்கு வழிவகுத்தது.

X
Dinamani
www.dinamani.com