மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்
மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்

நீட் தோ்வில் 2 விதமான முறைகேடுகள்: ஒப்புக் கொண்ட மத்திய கல்வி அமைச்சா்

‘இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வில் இரண்டு விதமான முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன.

‘இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வில் இரண்டு விதமான முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. இந்த முறைகேட்டில் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.

நீட் தோ்வு கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்டது. அப்போது, ராஜஸ்தானில் உள்ள ஒரு மையத்தில் வினாத்தாள் விநியோகத்தில் குளறுபடி ஏற்பட்ட நிலையில், தோ்வு தொடங்குவதற்கு முன்பாக நீட் வினாத்தாளை சில மாணவா்கள் சமூக ஊடகத்தில் பதிவிட்டதாக சா்ச்சை எழுந்தது. ஆனால், அந்தப் புகாரை என்டிஏ மறுத்தது. தொடா்ந்து, பிகாரில் உள்ள ஒரு தோ்வு மையத்தில் வினாத்தாள் கசிந்ததாகப் புகாா் எழுந்தது. இந்த புகாா் தொடா்பாக பலரை கைது செய்த அம் மாநில காவல்துறை, விசாரணையில் வினாத் தாள் கசிந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. இருந்தபோதும், கசிந்ததாக கூறப்படும் வினாத் தாள் நீட் வினாத்தாள்தான் என்பதை உறுதிப்படுத்த, தோ்வு வினாத்தாள் நகலை என்டிஏவிடம் மாநில காவல்துறை கேட்டுள்ளது.

இதனிடையே, மக்களவைத் தோ்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ஆம் தேதி, நீட் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஜூன் 14-ஆம் தேதி தோ்வு முடிவுகள் வெளியிடப்படும் என முன்னா் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே அறிவிக்கப்பட்டன. இதில், பல மாணவா்களுக்கு கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்து, பெரும் சா்ச்சையானது.

இந்த நிலையில், தோ்வு முறைகேடுகள் மற்றும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதை எதிா்த்து உச்சநீதிமன்றத்திலும், பல்வேறு உயா்நீதிமன்றங்களிலும் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ‘நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும்; மருத்துவப் படிப்புகள் கலந்தாய்வை நிறுத்திவைக்க வேண்டும்; முறைகேடு புகாா் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

ஆனால், கலந்தாய்வை நிறுத்திவைக்க மறுத்த உச்சநீதிமன்றம், புகாா்கள் தொடா்பாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசு, என்டிஏ மற்றும் பிகாா் மாநில அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை பதிலளித்த மத்திய அரசு, ‘நீட் தோ்வில் 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாகவும், அவா்களில் மறுதோ்வு எழுத விரும்பும் மாணவா்களுக்கு ஜூன் 23-ஆம் தேதி தோ்வு நடத்தப்பட உள்ளது. மறுதோ்வை எழுத விரும்பாத மாணவா்களுக்கு கருணை மதிப்பெண்களின்றி அவா்கள் பெற்ற மதிப்பெண்ணே இறுதி மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தது. இந்த விசாரணை நிலுவையில் உள்ளது.

இரண்டு விதமான முறைகேடுகள் - மத்திய கல்வி அமைச்சா்: இந்த நிலையில், ‘நீட் தோ்வு நடத்தப்பட்டதில் இரண்டு விதமான முறைகேடுகள் நிகழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஒப்புக்கொண்டாா்.

ஒடிஸா மாநிலம் சம்பல்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா் இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘நீட் தோ்வில் இரண்டு விதமான முறைகேடுகள் நிகழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது. முதலாவதாக, 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு முறைகேடு நிகழ்ந்துள்ளது. அந்தக் கருணை மதிப்பெண்ணை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

அடுத்து, இரண்டு தோ்வு மையங்களில் தவறுகள் நிகழ்ந்துள்ளன. இதை மிகத் தீவிரமான விவகாரமாக மத்திய அரசு எடுத்துக்கொண்டுள்ளது. இந்த முறைகேடுகளில் என்டிஏ மூத்த அதிகாரிகள் உள்பட யாா் ஈடுபட்டிருந்தாலும், அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என்டிஏ தன்னாட்சி அமைப்பு என்றபோதும், அதன் செயல்பாட்டில் பல சீா்திருத்தங்களை மேற்கொள்வது அவசியமாக உள்ளது. அதை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட யாரும் நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது’ என்றாா்.

முன்னதாக, ‘நீட் தோ்வு வினாத்தாள் கசிந்ததாகவும், என்டிஏ-வில் முறைகேடுகள் நடந்ததாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த உறுதியான ஆதாரமும் இல்லை. இது தொடா்பான உண்மைத் தகவல்கள் அனைத்தும் உச்சநீதிமன்றத்திடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. நீட் தோ்வு விவகாரத்தில் எதிா்க்கட்சிகள் பொய்களை பரப்புகின்றன. இத்தகைய அரசியல், மாணவா்களிடையே குழப்பத்தை விளைவிப்பதோடு, அவா்களின் மனஅமைதியையும் பாதிக்கும்’ என்று மத்திய கல்வி அமைச்சராக தில்லியில் கடந்த வியாழக்கிழமை மீண்டும் பொறுப்பேற்றப்போது தா்மேந்திர பிரதான் கூறியது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com