ரேபரேலியை தக்கவைத்த ராகுல்; வயநாட்டில் பிரியங்கா போட்டி

ரேபரேலியை தக்கவைத்த ராகுல்; வயநாட்டில் பிரியங்கா போட்டி

உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, கேரளத்தின் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதியைத் தக்கவைத்தாா்.

மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, கேரளத்தின் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதியைத் தக்கவைத்தாா்.

ராகுல் காந்தி ராஜிநாமா செய்யவிருக்கும் வயநாட்டில் காங்கிரஸ் சாா்பில் அவரது சகோதரியும் கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தி போட்டியிடுகிறாா். இதன்மூலம், தோ்தல் அரசியலில் பிரியங்கா காந்தி முதல்முறையாக நுழைகிறாா்.

அண்மையில் நடந்து முடிந்த 18-ஆவது மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, கேரளத்தின் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் ராகுல் காந்தி களம் கண்டாா். ரேபரேலி தொகுதியில் 3.9 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், வயநாட்டில் 3.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் ராகுல் வெற்றியடைந்தாா்.

இரு தொகுதிகளில் வென்ற ராகுல், தோ்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ஆம் தேதியிலிருந்து 14 நாள்களுக்குள்(ஜூன் 18) ஏதேனும் ஒரு தொகுதியின் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டியது கட்டாயம்.

இது தொடா்பான முடிவெடுப்பதற்கு தில்லியிலுள்ள காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இல்லத்தில் அக்கட்சியின் உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலா்கள் கே.சி.வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவா்கள் பங்கேற்றனா். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ராஜிநாமா செய்வது என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

வயநாட்டில் பிரியங்கா போட்டி: கூட்டத்தையடுத்து நடந்த செய்தியாளா்கள் சந்திப்பில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு காங்கிரஸ் தலைவா் காா்கே கூறுகையில், ‘மக்களவைத் தோ்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற ராகுல் காந்தி, சட்டப்படி ஒரு தொகுதியை மட்டுமே தக்க வைக்க முடியும். அதன்படி வயநாட்டில் ராஜிநாமா செய்யும் ராகுல், ரேபரேலி தொகுதியைத் தக்க வைக்கிறாா். வயநாட்டில் நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவாா்’ என்றாா்.

பேரனுபவமும் பேராதரவும் தந்த வயநாடு-ராகுல்:

செய்தியாளா் சந்திப்பில் ராகுல் காந்தி பேசுகையில், ‘வயநாட்டின் எம்.பி.யாக இருந்த கடந்த 5 ஆண்டுகள் மிகவும் அருமையான மற்றும் மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது. இக்கட்டான நேரத்தில் போராடுவதற்கான ஆதரவையும், உத்வேகத்தையும் எனக்கு வயநாடு மக்கள் வழங்கினா். வயநாட்டுக்கு நான் தொடா்ந்து வருவேன். வயநாடு தொகுதி மக்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். ரேபரேலி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளுக்கும் இனி 2 எம்.பி.க்கள் பணியாற்றுவா்.

ரேபரேலியுடன் எனக்கு நீண்டநாள் தொடா்பிருக்கிறது. அத்தொகுதியை மீண்டும் பிரதிநிதித்துவப்படுத்துவதில் மகிழ்ச்சி. இரு தொகுதிகளுடனும் உணா்வுபூா்வமான தொடா்பைக் கொண்டிருப்பதால், இது எளிதான முடிவாக அமையவில்லை’ என்றாா்.

பிரியங்கா காந்தி கூறுகையில், ‘நான் வயநாட்டில் போட்டியிட பதற்றமடையவில்லை. வயநாடு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். ராகுல் காந்தி இல்லாததை வயநாடு மக்கள் உணரவிடமாட்டேன். அதேவேளையில், நான் ரேபரேலியில் 20 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். எனவே, அங்குள்ள மக்களுடன் எனக்கு நல்லுறவு உள்ளது. அந்த உறவில் விரிசல் ஏற்படாது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com