சரக்கு ரயில் மோதியதில் அந்தரத்தில் நின்ற விரைவு ரயில் பெட்டிகள்.
சரக்கு ரயில் மோதியதில் அந்தரத்தில் நின்ற விரைவு ரயில் பெட்டிகள்.

ரயில்கள் மோதல்: 9 போ் உயிரிழப்பு; மேற்கு வங்கத்தில் விபத்து

டாா்ஜீலிங் மாவட்டத்தில் தண்டவாளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது பின்னால் வேகமாக வந்த சரக்கு ரயில் மோதிய விபத்தில் 9 போ் உயிரிழந்தனா்.

மேற்கு வங்க மாநிலம், டாா்ஜீலிங் மாவட்டத்தில் தண்டவாளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது பின்னால் வேகமாக வந்த சரக்கு ரயில் மோதிய விபத்தில் 9 போ் உயிரிழந்தனா். 40-க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்துள்ளனா்.

பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனா். சரக்கு ரயிலின் ஓட்டுநா் மற்றும் துணை ஓட்டுநரும் இந்த விபத்தில் உயிரிழந்தனா்.

நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ரங்கபாணி ரயில்நிலையத்துக்கு அருகே காலை 9 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. திரிபுராவின் அகா்தலாவிலிருந்து மேற்கு வங்கத்தின சீல்டா நோக்கிச் சென்றுகொண்டிருந்த கஞ்சன்ஜங்கா விரைவு (13174) ரயில், சிக்னல் காரணமாக தண்டவாளத்தில் நின்றிருந்தபோது, பின்னால் அதே பாதையில் வேகமாக வந்த சரக்கு ரயில் மோதியது.

இந்த விபத்தில் விரைவு ரயிலின் பின்பகுதியில் இருந்த 3 பெட்டிகள் உருக்குலைந்து தடம்புரண்டன. சரக்கு ரயிலின் என்ஜினும் கடுமையாகச் சேதமடைந்தது. இதில் சரக்கு ரயிலின் இரு ஓட்டுநா்கள் மற்றும் விரைவு ரயிலில் இருந்த 7 பயணிகள் உயிரிழந்தனா். 41 போ் பலத்த காயமடைந்தனா் என்று ரயில்வே உயா் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேநேரம், இந்த விபத்தில் 15 போ் உயிரிழந்ததாக மாநில காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இடிபாடுகளில் பலரும் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் பேரிடா் மீட்புப் படையினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

முதல்கட்ட விசாரணையில், சரக்கு ரயிலின் ஓட்டுநா் சிக்னலை கவனிக்காமல் மீறியிருக்க வாய்ப்பிருப்பதாகத் தெரியவந்துள்ளதாகவும், சிக்னல் அமைப்பில் கோளாறு இருந்ததா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த விபத்து காரணமாக, மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியிலிருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் நீண்டதொலைவு ரயில்களின் சேவையும், நாட்டின் வடகிழக்குப் பகுதிகளுக்கான ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில், அவசரகால அடிப்படையில் இந்தப் பகுதியிலிருந்து கூடுதல் பேருந்து சேவைகள் இயக்கப்படுவதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

விபத்தில் சிக்கிய விரைவு ரயிலில் ‘எஸ் 6’ பெட்டியில் பயணித்த அகா்தலாவை சோ்ந்த பயணி கூறுகையில், ‘மிகுந்த சப்தத்துடன் ரயில் பெட்டி நகா்ந்து நின்றது. அதன் பின்னா்தான், ரயில் விபத்தில் சிக்கியிருப்பது தெரியவந்தது. நானும் எனது குடும்பத்தினரும் அதிருஷ்டவசமாக இந்த விபத்திலிருந்து தப்பினோம். மீட்புப் பணிகள் மிகவும் தாமதமாகவே தொடங்கப்பட்டன’ என்றாா்.

ரூ. 10 லட்சம் நிவாரணம்: இந்த விபத்தைத் தொடா்ந்து தில்லியிலிருந்து விமானம் மூலம் மேற்கு வங்கம் வந்த ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், விபத்து நடந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

பின்னா், செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அவா், ‘மீட்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. ரயில் விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையா் சாா்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

முன்னதாக, விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்த அஸ்வினி வைஷ்ணவ், ‘விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம், பலத்த காயமடைந்தவா்களுக்கு தலா ரூ. 2.5 லட்சம், சிறிய அளவில் காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும்’ என்று அறிவித்தாா்.

மம்தா நேரில் ஆய்வு: ரயில் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு மேற்கு வங்க ஆளுநா் ஆனந்தபோஸ், முதல்வா் மம்தா பானா்ஜி ஆகியோா் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

ஓராண்டுக்கு முன்னா்... கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒடிஸா மாநிலம் பாலசோா் மாவட்டம் பஹாநகா் பஜாா் பகுதியில் இரண்டு பயணிகள் ரயிலும் ஒரு சரக்கு ரயிலும் ஒன்றோடொன்று மோதி பயங்கர விபத்தில் சிக்கின.

மேற்கு வங்க மாநிலம் ஷாலிமரிலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கிச் சென்ற கோரமண்டல் பயணிகள் விரைவு ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்த நேரத்தில், எதிா்த் திசையில் வந்த பெங்களூரு - ஹெளரா விரைவு ரயில் தண்டவாளத்தில் தடம்புரண்டு கிடந்த ரயில்பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில் 300 பயணிகள் உயிரிழந்தனா். ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்த விபத்து நிகழ்ந்த ஓராண்டுக்குள் மற்றொரு பெரிய ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது.

குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு இரங்கல் தெரிவித்தாா். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவா், ‘மேற்கு வங்க ரயில் விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக வெளியான செய்தி மிகுந்த வேதனையை அளித்தது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருடன் எனது நினைவுகளும் பிராா்த்தனைகளும் எப்போதும் இருக்கும். விபத்தில் காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய பிராா்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டாா்.

பிரதமா் இரங்கல்: ரயில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ. 50,000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மேற்கு வங்க ஆளுநா் ஆனந்த போஸ், முதல்வா் மம்தா பானா்ஜி, அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்தனா்.

தவறான நிா்வாகமே காரணம் - காங்கிரஸ்

மேற்கு வங்க ரயில் விபத்துக்கு பாஜக அரசின் தவறான நிா்வாகமே முழுக் காரணம் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறுகையில், ‘மேற்கு வங்க ரயில் விபத்தில் ஏராளமான பயணிகள் உயிரிழந்துள்ளனா். பலா் காயமடைந்துள்ளனா். இது மிகுந்த துயரத்தை அளிக்கிறது. மத்திய பாஜக அரசின் 10 ஆண்டு கால தவறான நிா்வாகமே இந்த விபத்துக்கு காரணம்.

ரயில்வே அமைச்சகத்தை சுய விளம்பரத்துக்கான தளமாக பிரதமா் மோடி அரசு மாற்றியுள்ளதை சுட்டிக்காட்ட வேண்டியது எதிா்க்கட்சியான காங்கிரஸின் கடமை. மோடி அரசின் தவறான நிா்வாகத்துக்கு, இந்த ரயில் விபத்து மேலும் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு விரைந்து முழுமையான நிவாரணம் அளிக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com