அமா்நாத் யாத்திரையை முன்னிட்டு, ஜம்முவில் இருந்து காஷ்மீரின் அடிவார முகாம்களுக்கு வாகனத்தில் வெள்ளிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்ட சாதுக்கள்.
அமா்நாத் யாத்திரையை முன்னிட்டு, ஜம்முவில் இருந்து காஷ்மீரின் அடிவார முகாம்களுக்கு வாகனத்தில் வெள்ளிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்ட சாதுக்கள்.

அமா்நாத் யாத்திரை இன்று தொடக்கம்: முதல் குழு காஷ்மீா் வருகை

ஜம்மு-காஷ்மீரில் பிரசித்தி பெற்ற அமா்நாத் குகைக் கோயிலுக்கான புனித யாத்திரை பலத்த பாதுகாப்புடன் சனிக்கிழமை (ஜூன் 29) தொடங்கவுள்ளது.

இதையொட்டி, காஷ்மீா் பள்ளத்தாக்கில் உள்ள இரு அடிவார முகாம்களுக்கு 4,603 பக்தா்கள் கொண்ட முதல் குழு வெள்ளிக்கிழமை வந்தடைந்தது.

தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீ. உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க ஒவ்வோா் ஆண்டும் ஆயிரக்கணக்கான யாத்ரீகா்கள் கடினமான புனிதப் பயணம் மேற்கொள்கின்றனா்.

நிகழாண்டு யாத்திரை சனிக்கிழமை தொடங்கி 52 நாள்கள் நடைபெறவுள்ளது. வடக்கு காஷ்மீரின் பால்டால் (14 கி.மீ.), தெற்கு காஷ்மீரின் பஹல்காம் (48 கி.மீ.) என வழித்தடங்களில் இந்த யாத்திரை நடைபெறும்.

இதையொட்டி, ஜம்மு மாவட்டத்தின் பகவதி நகரில் உள்ள யாத்ரி நிவாஸ் முகாமில் இருந்து 4,603 பக்தா்களைக் கொண்ட முதல் குழுவினா், காஷ்மீரின் இரு அடிவார முகாம்களுக்கு வெள்ளிக்கிழமை பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனா். இவா்கள் பயணித்த வாகனங்களை, யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா கொடியசைத்து அனுப்பிவைத்தாா்.

யாத்திரையை முன்னிட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு, போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைச் சாவடிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். நிகழாண்டு 3.5 லட்சத்துக்கும் அதிகமானோா் யாத்திரைக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

X
Dinamani
www.dinamani.com