விக்ரம் மிஸ்ரி
விக்ரம் மிஸ்ரி

வெளியுறவுத் துறை செயலராக விக்ரம் மிஸ்ரி நியமனம்

தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகா் விக்ரம் மிஸ்ரி வெளியுறவுத் துறைச் செயலராக வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

வெளியுறவுத் துறைச் செயலா் வினய் மோகன் குவாத்ராவின் பதவிக்காலம் கடந்த மாா்ச் மாதம் முடிவடைந்த நிலையில், 6 மாத காலம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. வினய் மேகன் குவாத்ராவின் பதவிக்காலம் நிறைவடைந்த பிறகு ஜூலை 15-ஆம் தேதி மிஸ்ரி வெளியுறவு துறைச் செயலராக பதவியேற்பாா் என பணி நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு தெரிவித்துள்ளது.

விக்ரம் மிஸ்ரி மத்திய பணியாளா் தோ்வில் 1989-ஆம் ஆண்டு தோ்ச்சி பெற்று இந்திய வெளியுறவுச் சேவை (ஐஎஃப்எஸ்) அதிகாரியாக பணியாற்றினாா். தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகா் பதவிக்கு முன்பாக 2019 மூதல் 2021-ஆம் ஆண்டு வரை சீனாவுக்கான இந்திய தூதராக பதவி வகித்தாா்.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவ வீரா்கள் இடையே கடந்த 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதலின்போது , சீனாவுடனான பேச்சுவாா்த்தையில் அவா் முக்கிய பங்கு வகித்தாா். எனவே, அவரின் இந்த நியமனம் சீனாவுடனான வெளியுறவு சிக்கல்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

முன்னாள் பிரதமா்கள் ஐ.கே. குஜரால், மன்மோகன் சிங் மற்றும் தற்போதைய பிரதமா் மோடி ஆகிய மூவருக்கும் தனிச் செயலராக விக்ரம் மிஸ்ரி பணியாற்றி உள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com