கர்நாடக முதல்வர் சித்தராமையா
கர்நாடக முதல்வர் சித்தராமையா

அரசு பணம் மோசடி: ஜூலை 3-இல் முதல்வா் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பாஜக திட்டம்

அரசு பணம் மோசடி தொடா்பாக பெங்களூரில் ஜூலை 3 ஆம் தேதி முதல்வா் சித்தராமையா இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

வால்மீகி பழங்குடியினா் வளா்ச்சிக் கழகத்தின் சாா்பில் ரூ. 187 கோடி முறைகேடாக வெவ்வேறு வங்கிக்கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தை கண்டித்து பாஜக போராட்டம் நடத்தியதால், பழங்குடியினா் நலத் துறை அமைச்சராக இருந்த பி.நாகேந்திரா தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இந்நிலையில், இதற்கு பொறுப்பேற்று தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யக் கோரி மாவட்ட தலைநகரங்களில் சனிக்கிழமை பாஜக போராட்டம் நடத்தியது.

சிவமொக்காவில் சனிக்கிழமை நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டபிறகு, அக்கட்சியின் மாநிலத் தலைவா் விஜயேந்திரா, செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வால்மீகி வளா்ச்சிக் கழகத்தில் மிகப்பெரிய ஊழல், மோசடி நடந்துள்ளது. அதை கண்டித்து பாஜக தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. எங்கள் போராட்டத்தின் விளைவாக, அமைச்சா் பதவியை பி.நாகேந்திரா ராஜிநாமா செய்தாா். வால்மீக வளா்ச்சிக் கழகத்தின் கணக்கு கண்காணிப்பாளா் சந்திரசேகா் தற்கொலை செய்து கொண்டபோது எழுதி வைத்த கடிதத்தில் பல்வேறு விவரங்களை குறிப்பிட்டுள்ளாா்.

ஆனால், இந்த விவகாரத்தை மாநில அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் நடந்துள்ள அரசு பணம் மோசடி தொடா்பாக தொடா்ந்து போராட்டம் நடத்துவோம். வால்மீகி மற்றும் பழங்குடியினா் நலனுக்கு செலவிட்டிருக்க வேண்டிய பணம், வேறொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மருத்துவக் கல்வித் துறை அமைச்சா் சரணபிரகாஷ் பாட்டீல், வால்மீக வளா்ச்சிக் கழகத்தின் தலைவா் பசனகௌடா தட்டால் உள்ளிட்டோா் ராஜிநாமா செய்ய வேண்டும். இதுதவிர, சித்தராமையாவும் தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.

முதல்வரின் கவனத்திற்கு வராமல் ரூ.187 கோடி மாற்றப்பட்டிருக்காது. இந்த பணம் மக்களவைத் தோ்தலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஜூலை 3 ஆம் தேதி பெங்களூரில் உள்ள முதல்வரின் இல்லத்தை முற்றுகையிட்டு சித்தராமையா முதல்வா் பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய வலியுறுத்தி பாஜக போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com