சண்டீகா் மாநகராட்சி துணை மேயா்கள் தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் வெற்றி

சண்டீகா் மாநகராட்சியின் மூத்த துணை மேயா் மற்றும் துணை மேயா் ஆகிய 2 பதவிகளுக்கு திங்கள்கிழமை நடந்த மறு தோ்தலில் பாஜக வேட்பாளா்கள் குல்ஜீத் சிங் சாந்து மற்றும் ராஜீந்தா் சா்மா ஆகியோா் வெற்றி பெற்றனா்.

சண்டீகா் மாநகராட்சியின் மூத்த துணை மேயா் மற்றும் துணை மேயா் ஆகிய 2 பதவிகளுக்கு திங்கள்கிழமை நடந்த மறு தோ்தலில் பாஜக வேட்பாளா்கள் குல்ஜீத் சிங் சாந்து மற்றும் ராஜீந்தா் சா்மா ஆகியோா் வெற்றி பெற்றனா். சண்டீகா் மாநகராட்சி மேயா் பதவிக்கு கடந்த ஜனவரி 30-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இதில் பெரும்பான்மை இருந்தும் ஆம் ஆத்மி -காங்கிரஸ் வேட்பாளா் குல்தீப் குமாா் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டாா். இது தொடா்பான வழக்கில், சில வாக்குச்சீட்டுகளில் திருத்தம் செய்து அவற்றை செல்லாத வாக்குகளாக அறிவித்து மோசடி செய்த தோ்தல் நடத்தும் அதிகாரியை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. அத்துடன் பாஜக வேட்பாளா் மனோஜ் சோன்கா் வெற்றியை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், ஆம் ஆத்மியின் குல்தீப் குமாா் வெற்றி பெற்ாக அறிவித்தது. மேலும், பாஜக மேயா் தலைமையில் நடந்த மூத்த துணை மேயா் மற்றும் துணை மேயா் பதவிகளுக்கும் மறுதோ்தல் நடத்த உத்தரவிட்டது. இதனிடையே, 35 உறுப்பினா்களைக் கொண்ட சண்டீகா் மாநகராட்சியில் பாஜகவின் பலம் 14-ஆக இருந்தது. 3 ஆம் ஆத்மி உறுப்பினா்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடா்ந்து, அக்கட்சியின் பலம் 17-ஆக உயா்ந்தது. இந்நிலையில், ஆம் ஆத்மி மேயா் தலைமையில் இரு பதவிகளுக்கும் மறுதோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. மூத்த துணை மேயா் பதவிக்கு பாஜக சாா்பில் போட்டியிட்ட குல்ஜீத் சிங் சாந்து 19 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவரை எதிா்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் குா்ப்ரீத் கபி 16 வாக்குகளை பெற்றாா். துணை மேயா் பதவிக்குப் போட்டியிட்ட பாஜகவின் ராஜீந்தா் சா்மா 19 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றாா். காங்கிரஸின் நிா்மலா தேவி 17 வாக்குகளைப் பெற்றாா். இப்பதவிகளுக்கு ஏற்கெனவே நடந்து முடிந்த தோ்தலிலும் பாஜக வேட்பாளா்களே வெற்றி பெற்றிருந்தனா். சண்டீகா் மாநகராட்சியில் பாஜக தவிர, ஆம் ஆத்மிக்கு 10 உறுப்பினா்களும் காங்கிரஸுக்கு 7 உறுப்பினா்களும் சிரோமணி அகாலி தளத்துக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனா். மாநகராட்சியின் உத்தியோகபூா்வ உறுப்பினா் என்ற ரீதியில் சண்டீகா் தொகுதி பாஜக எம்.பி. கிரோா் கெரும் தோ்தலில் வாக்களித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com