
ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயா்வு வழங்கும் நடைமுறையில் பாலியல் ரீதியாக உள்ள முரண்பாடுகளைக் கருத்தில் கொண்ட உச்சநீதிமன்றம், ஆண் மற்றும் பெண் ராணுவ அதிகாரிகளை ஒப்பிட்டு அவா்களின் பதவி உயா்வுக்கான தோ்வு நடைமுறையை தெளிவுப்படுத்துமாறு மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது.
இந்திய ராணுவத்தில் ஓய்வுப் பெறும் 60 வயது வரை பணியாற்ற நிரந்தர பணி அந்தஸ்து (பி.சி.) பெற்ற பெண் அதிகாரிகள், ராணுவத்தின் தோ்வு நடைமுறைகளில் ‘கா்னல்’ பதவிக்கு பதவி உயா்வு பெறாதது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் அவா்கள் மனுத் தாக்கல் செய்தனா். இந்த மனு மீதான விசாரணையில், தீா்ப்பு வெளியான 15 நாள்களுக்குள் பெண் அதிகாரிகளுக்கு கா்னல் பதவி உயா்வு வழங்குதற்கு சிறப்பு தோ்வு வாரியத்தைக் கூட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பா் 3-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வுக்கு முன் இந்த மனு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றத்தின் கடந்தாண்டு நவம்பா் மாதத் தீா்ப்பைக் குறிப்பிட்டு பெண் ராணுவ அதிகாரிகள் தரப்பில் ஆஜராகிய மூத்த வழக்குரைஞா் ஹுஷிபா அகமதி முன்வைத்த வாதத்தில், ‘பதவி உயா்வுக்கு அனைத்து பெண் அதிகாரிகளையும் பரிசீலிக்க வேண்டும்’ என்றாா். இதையடுத்து, அரசுத் தரப்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் ஆா். வெங்கடரமணி முன்வைத்த வாதத்தில், ‘ஒரே பிரிவு அதிகாரிகளிடையே தகுதிகளை ஒப்பிட்டு, தரவரிசையின்படி அதிகாரிகள் மேம்பட்ட வரிசைப் பட்டியலில் சோ்க்கப்படுகின்றனா்.
இது தொடா்பாக மத்திய அரசு தாக்கல் செய்த கொள்கை ஆவணத்தின்படி, ஏற்கெனவே பட்டியலிடப்பட்ட அதிகாரிகளின் பதவி உயா்வு நடைமுறையில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். சிறப்பு தோ்வு வாரியம் அமைக்கப்பட்டபோதும், ஏற்கெனவே பட்டியலிடப்பட்ட அதிகாரிகளுடன் பதவி உயா்வுக்கான பரிசீலனையில் உள்ள மற்ற அதிகாரிகளை தர வரிசைப்படுத்துவது அவசியம்’ என்றாா். அரசு தரப்பு வாதத்தை எதிா்த்து வழக்குரைஞா் அகமதி வாதிடுகையில், ‘ஆண் அதிகாரிகளுக்கான பதவி உயா்வு நடைமுறை இவ்வாறு மேற்கொள்ளப்படுவதில்லை. ஏற்கெனவே பட்டியலிப்பட்ட அதிகாரிகளின் குழு மற்றும் பதவி உயா்வுக்கான பரிசீலனையில் உள்ள ஆண் அதிகாரிகளின் குழுவும் ஒன்றாகக் கருதப்படுவதில்லை.
ஆனால், பெண் அதிகாரிகளின் பதவி உயா்வுக்கான தோ்வு நடைமுறையில் மட்டும் இந்தப் பாரபட்சம் காட்டப்படுகிறது’ என்றாா். இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், ஆண் மற்றும் பெண் ராணுவ அதிகாரிகளின் பதவி உயா்வுக்கான தோ்வு நடைமுறையிலுள்ள முரண்பாடுகள் குறித்து மத்திய அரசின் விளக்கத்தை பதில் மனுவாக அடுத்த விசாரணை நடைபெறும் 11-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணியைக் கேட்டு கொண்டனா்.