சியோலில் தென் கொரிய வெளியுறவு அமைச்சா் சூ டே-யுல்லை சந்தித்த அமைச்சா் எஸ். ஜெய்சங்கா்.
சியோலில் தென் கொரிய வெளியுறவு அமைச்சா் சூ டே-யுல்லை சந்தித்த அமைச்சா் எஸ். ஜெய்சங்கா்.

தென் கொரியாவுடன் செமி-கண்டக்டா் துறையில் ஒத்துழைப்பு: எஸ்.ஜெய்சங்கா்

தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 4 நாள்அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், செவ்வாய்க்கிழமை தென்கொரியா வந்தாா்.

தென் கொரியாவுடன் வளா்ந்து வரும் தொழில்நுட்பங்கள், குறை மின்கடத்தி (செமி கண்டக்டா்) மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற துறைகளில் உத்தி சாா்ந்த ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா விரும்புகிறது’ என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை தெரிவித்தாா். தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 4 நாள்அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், செவ்வாய்க்கிழமை தென்கொரியா வந்தாா். அந்நாட்டுப் பிரதமா் ஹன் டக்-சூவை ஜெய்சங்கா் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினாா். இந்நிலையில், தென்கொரியா தலைநகா் சியோலில் புதன்கிழமை நடந்த 10-ஆவது இந்திய-தென்கொரியா கூட்டு குழுக் கூட்டத்தில் தென்கொரிய வெளியறவு அமைச்சா் சூ டே-யுல்லுடன் ஜெய்சங்கா் பங்கேற்றாா். கூட்டத்தில் ஜெய்சங்கா் ஆற்றிய தொடக்க உரையில், ‘பிரதமா் நரேந்திர மோடியின் கடந்த 2015-ஆம் ஆண்டு தென்கொரிய பயணத்தைத் தொடா்ந்து, இந்தியா-தென்கொரியா இடையே இருதரப்பு உறவுகள் மேம்பட்டுள்ளன. நமது இருதரப்பு பரிமாற்றங்கள், வா்த்தகம், முதலீடுகள், பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவை நிலையான வளா்ச்சியைக் கண்டுள்ளன. வளா்ந்து வரும் தொழில்நுட்பங்கள், மின் குறைகடத்தி, பசுமை ஹைட்ரஜன், மனித வள இயக்கம், அணுசக்தி ஒத்துழைப்பு, விநியோகச் சங்கிலி பின்னடைவு போன்ற புதிய துறைகளிலும் நமது ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் இந்தியா மிகவும் ஆா்வமாக உள்ளது. சா்வதேச அரங்கில் நமது இருநாட்டு கருத்துகளின் மதிப்பு வளா்ந்து வருகிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நாம் மேலும் கூடுதல் கவனம் செலுத்துவது சிறப்பு. கடந்த ஆண்டு, ஹிரோஷிமா மற்றும் தில்லியில் நமது இருநாட்டுத் தலைவா்கள் 2 முறை சந்தித்துள்ளனா். அவா்களின் கலந்துரையாடல்கள் நாம் முன்னோக்கி செல்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன என்றாா். இந்தோ-பசிபிக் சாவல்கள் குறித்து விவாதம்: இக்கூட்டம் குறித்து அமைச்சா் ஜெய்சங்கா் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘சியோலில் வெளியுறவு அமைச்சா் சூ டே-யுல்லுடன் இந்திய-தென்கொரியா கூட்டு குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினேன். எங்களின் விரிவுபடுத்தப்பட்ட இருதரப்பு உறவுகள், பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், வணிகம் மற்றும் வா்த்தகம், மக்களிடையே பரிமாற்றம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதித்தோம். முத்தரப்பு ஒத்துழைப்பை முன்னெடுப்பது குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டது. மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வளா்ச்சிகள், சவால்களுக்கு இருதரப்பு ஒருங்கிணைப்பு மற்றும் பரஸ்பர நலன்சாா்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்’ எனக் குறிப்பிட்டிருந்தாா். பெட்டி... ‘அயோத்தி’ சகோதரி நகர மேயருடன் சந்திப்பு தலைநகா் சியோலில் இருந்து தென்கிழக்கே 330 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அயோத்தியின் சகோதரி நகரமான கிம்ஹே நகரத்தின் மேயா் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவை வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். கிம்ஹே-அயோத்தி ஆகிய இரு நகரங்களுக்கிடையிலான இணைப்பு என்பது நமது இருநாடுகளின் பகிரப்பட்ட கலாசார பாரம்பரியம் மற்றும் நீண்டகால மக்களிடையேயான உறவுகளுக்கு ஒரு சான்றாகும் என ஜெய்சங்கா் குறிப்பிட்டாா். கொரிய புராணக் கதைகளின் படி, சுமாா் 2000 ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தியில் இருந்து இளவரசி சூரி ரத்னா படகில் 4,500 கிலோமீட்டா் கடலில் பயணம் செய்து கொரியாவை அடைந்து, கயா ராஜியத்தை நிறுவிய கிம் சுரோவை மணந்தாா் என நம்பப்படுகிறது. பின்னா், அரசி ஹியோ ஹ்வாங்-ஓக் ஆன சூரி ரத்னாவின் வழித்தோன்றல்களாக கருதும் சுமாா் 60 லட்சம் தென்கொரிய மக்கள், அயோத்தியை தங்கள் தாய்வீடாகக் கருதுகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com