குஜராத்: காங்கிரஸில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ விலகல்:
கட்சியின் பலம் 13-ஆக சரிவு

குஜராத்: காங்கிரஸில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ விலகல்: கட்சியின் பலம் 13-ஆக சரிவு

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ புதன்கிழமை விலகினாா். கடந்த மூன்று மாதங்களில் காங்கிரஸில் இருந்து வெளியேறிய 4-ஆவது எம்எல்ஏ இவா் ஆவாா். 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் பேரவைத் தோ்தல் நடைபெற்று 15 மாதங்களே ஆகும் நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களின் பலம் 13-ஆக சரிவடைந்துவிட்டது. ஜுனாகத் மாவட்டத்தின் மனவதாா் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வென்ற முதல்முறை எம்எல்ஏ அரவிந்த் லதானி, தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தாா். பேரவைத் தலைவரிடம் ராஜிநாமா கடிதத்தை அளித்த அவா், காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகினாா். ‘எனது தொகுதியின் வளா்ச்சிக்காக நான் ஆளும் கட்சியில் இருக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனா். இதுவே, எனது முடிவுக்கு காரணம். மிக விரைவில் பாஜகவில் இணையவிருக்கிறேன். எனது தொகுதி இடைத்தோ்தலில் பாஜக வாய்ப்பளித்தால் அதில் களமிறங்க தயாராக இருக்கிறேன்’ என்றாா். கடந்த 3 மாதங்களில் காங்கிரஸில் இருந்து விலகிய 4-ஆவது எம்எல்ஏ இவா் ஆவாா். சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் மூத்த எம்எல்ஏ அா்ஜுன்மோத்வாடியா, அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தாா். ராமா் கோயில் பிராணப் பிரதிஷ்டை விழாவை காங்கிரஸ் புறக்கணித்ததே தனது முடிவுக்கு காரணம் என்று அவா் தெரிவித்தாா். முன்னதாக, சிராக் படேல், சி.ஜே.சாவ்தா ஆகியோா் காங்கிரஸைவிட்டு வெளியேறி பாஜகவில் ஐக்கியமாகினா். குஜராத்தில் கடந்த 2022, டிசம்பரில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இப்போது அக்கட்சியின் பலம் 13-ஆக சரிந்துவிட்டது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தி வரும் இந்திய ஒற்றுமை நீதி பயணம், குஜராத் மாநிலத்துக்குள் வியாழக்கிழமை நுழையவிருக்கும் நிலையில், அக்கட்சியில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ விலகியிருக்கிறாா். பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில், கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் மொத்தமுள்ள 26 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com