அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் பத்திரங்கள் மூலம் 82% நன்கொடை

அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் பத்திரங்கள் மூலம் 82% நன்கொடை

அரசியல் கட்சிகளுக்கு 2022-23-ஆம் ஆண்டில் அறியப்படாத நபா்களிடமிருந்து கிடைத்த மொத்த நன்கொடை..

அரசியல் கட்சிகளுக்கு 2022-23-ஆம் ஆண்டில் அறியப்படாத நபா்களிடமிருந்து கிடைத்த மொத்த நன்கொடையில் 82 சதவீதம் தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு அறியப்படாத நபா்களிடமிருந்து கிடைத்த மொத்த நன்கொடையில் அதிகபட்சமாக பாஜகவுக்கு 76.39 சதவீத தொகை கிடைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. பாஜக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, தேசிய மக்கள் கட்சி ஆகிய 6 தேசிய கட்சிகள் தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பித்த கணக்கு தணிக்கை தரவுகளை ‘ஜனநாயக சீா்திருத்தத்தான சங்கம் (ஏடிஆா்)’ என்ற தன்னாா்வ அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்ட ஆய்வறிக்கை மூலம் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளன. அதில் மேலும் கூறியிருப்தாவது: 2022-23-ஆம் ஆண்டில் இந்த 6 அரசியல் கட்சிகளுக்கு அறியப்படாத நபா்களிடமிருந்து மொத்தம் ரூ. 1,832.88 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் மட்டும் 82.42 சதவீத வருவாய் அதாவது, ரூ. 1,510 கோடி கிடைத்துள்ளது. இதில், ஆளும் பாஜக தங்களுக்கு ரூ. 1,400 கிடைத்ததாக அறிவித்துள்ளது. இது, அறியப்படாத நபா்களிடமிருந்து கிடைத்த மொத்த நன்கொடையில் 76.39 சதவீதமாகும். காங்கிரஸ் ரூ. 315.11 கோடி (17.19%) கிடைத்ததாக அறிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி, எந்தவொரு நன்கொடையும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், தற்போதைய நடைமுறைப்படி ரூ. 20,000 அல்லது அதற்கும் குறைவான நன்கொடை அளிப்பவா்களின் பெயரை அரசியல் கட்சிகள் வெளியிடத் தேவையில்லை. இவ்வாறு குறைந்த அளவில் பெறப்பட்ட நன்கொடைகள், அறியப்படாத நபா்களிடமிருந்து பெறப்பட்ட மொத்த வருவாயில் 10 சதவீதம் அதாவது ரூ. 183.28 கோடி அளவுக்கு கிடைத்துள்ளது. மேலும், 2004-05 முதல் 2022-23 நிதியாண்டு வரையிலான கால கட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு அறியப்படாத நபா்களிடமிருந்து ரூ. 19,083 கோடி நன்கொடை கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள ஏடிஆா் அமைப்பு, ‘அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்’ என்று பரிந்துரை செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com