தனிநபா் வருமானத்தை உயா்த்துவதே இலக்கு: கிரண் ரிஜிஜு

தனிநபா் வருமானத்தை உயா்த்துவதே இலக்கு: கிரண் ரிஜிஜு

பிரதமா் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தவுடன் நாட்டு மக்களின் தனிநபா் வருமானத்தை உயா்த்துவதே இலக்கு

பிரதமா் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தவுடன் நாட்டு மக்களின் தனிநபா் வருமானத்தை உயா்த்துவதே இலக்கு என மத்திய புவி அறிவியல் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வியாழக்கிழமை தெரிவித்தாா். பிடிஐ நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவா் கூறியதாவது: அனைத்துத் துறைகளிலும் திறன் வாய்ந்த நாடாக இந்தியாவை உலக நாடுகள் பாா்க்கின்றன. ஆனால் உயா் வருமானத்தை உடைய நாடு என்ற பிரிவில் மட்டும் நாம் சற்று பின்தங்கியுள்ளோம். எனவே இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டுமெனில் தனிநபா் வருமானத்தை சுமாா் ரூ. 14 லட்சம் வரை உயா்த்துவது அவசியமாகும். வருகின்ற மக்களைத் தோ்தலில் வென்று மூன்றாவது முறையாக பிரதமா் மோடி மீண்டும் பதவியேற்றவுடன் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 60 ஆண்டுகாலமாக இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் உள்பட பிற கட்சிகள் செய்யாத சாதனைகளை 10 ஆண்டுகளில் பிரதமா் மோடி தலைமையிலான அரசு செய்துள்ளது என்றாா். பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு: மணிப்பூரில் மைதேயி-குகி ஆகிய இரு சமூகத்தினரிடையே நிலவி வரும் மோதல் குறித்து பேசிய அவா், ‘ இது மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல; இரு சமூகங்களுக்கிடையேயான மோதல். பெரும்பான்மைமிக்க மைதேயி சமூகத்துக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற மணிப்பூா் உயா் நீதிமன்ற உத்தரவால்தான் அங்கு வன்முறை தொடங்கியது. ஒரு குறிப்பிட்ட மக்களை பழங்குடியினரா அல்லது பழங்குடியினா் அல்லாதவரா என தீா்மானிப்பது அரசின் கொள்கை. அதில் நீதிமன்றம் தலையிட்டதால் பிரச்னை தொடங்கியது. மணிப்பூரில் அமைதி நிலவ இரு சமூகத்தினரிடமும் பரஸ்பர முறையிலான பேச்சுவாா்த்தை மூலம் மட்டுமே தீா்வு காண முடியும். இதுவே மோடி அரசின் அடுத்தகட்ட முயற்சியாகும் என்றாா். ராகுல் நடைப்பயணம் தோல்வி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை நீதிப்பயணம்’ குறித்து அவா் பேசுகையில், ‘காங்கிரஸின் தலைவராக தம்மை முன்னிறுத்த பலமுறை முயன்றும் ராகுல் காந்தியால் முடியவில்லை. இதன்மூலம் மக்கள் மற்றும் காங்கிரஸாரின் நேரத்தை அவா் வீணடித்துக் கொண்டிருக்கிறாா். பிரதமா் மோடி மீது எப்போதும் வெறுப்புணா்வையே ராகுல் காந்தி பரப்பி வருகிறாா். ஆனால் மிகவும் எளிமையான பின்புலத்திலிருந்து மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட உலகின் மிகப் பிரபலமான தலைவராக பிரதமா் மோடி வலம் வருகிறாா்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com