”மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டி” -மாயாவதி

மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாகத் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
”மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டி” -மாயாவதி

உத்தரப் பிரதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி, வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி இன்று(மார்ச். 9) அறிவித்துள்ளார்.

இது குறித்து மாயாவதி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிற கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி அமைக்கப்போவதாகவும், மூன்றாவது அனி அமைக்கப் போவதாகவும் வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தியே. உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டியிடுவதால், எதிர்க்கட்சிகள் கலக்கமடைந்துள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாக அவர்கள் நாள்தோறும் விதவிதமான வதந்திகளைப் பரப்பி மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். இந்நிலையில், தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதில் பகுஜன் சமாஜ் உறுதியாக இருப்பதாக மாயாவதி பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, பகுஜன் சமாஜ் கட்சியின் வருகைக்காக இந்தியா கூட்டணியின் கதவுகள் திறந்தே உள்ளன என்று காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதனை மாயாவதி நிராகரித்துவிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது. ஏழை, எளிய, புறக்கணிக்கப்பட்ட மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சமூக நலன் கருதியும் மக்களவைத் தோ்தலை தனித்து சந்திக்கிறோம் என்று அவர் கடந்த மாதம் கூறியிருந்த நிலையில், தற்போது தங்களது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாக, நாட்டிலேயே அதிகளவிலான மக்களவைத் தொகுதிகளை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில், பாஜக மற்றும் இந்தியா கூட்டணியில் ஒன்றிணைந்து களம் காணும் காங்கிரஸ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சிகளுக்கு போட்டியாக பகுஜன் சமாஜ் கட்சியும் களத்தில் குதித்துள்ளதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் சமாஜவாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிட்டது. இதில் 10 இடங்களில் வென்று மாநிலத்தில் இரண்டாவது இடத்தை அக்கட்சி பிடித்தது. பாஜக அதிகபட்சமாக 62 தொகுதிகளில் வென்றது. சமாஜவாதி கட்சி 5 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com