சிபிஐ
சிபிஐ

அமலாக்கத் துறையினா் மீதான தாக்குதல்: ஷாஜஹானின் சிபிஐ காவல் 4 நாள்களுக்கு நீட்டிப்பு

மேற்கு வங்கத்தில் அமலாக்கத் துறையினா் தாக்கப்பட்ட வழக்கில் கைதான ஷாஜஹான் ஷேக்கின் சிபிஐ காவலை 4 நாள்களுக்கு நீட்டித்து, அந்த மாநில நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேற்கு வங்கத்தில் அமலாக்கத் துறையினா் தாக்கப்பட்ட வழக்கில் கைதான ஷாஜஹான் ஷேக்கின் சிபிஐ காவலை 4 நாள்களுக்கு நீட்டித்து, அந்த மாநில நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகராக இருந்த இவா், தற்போது கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். மேற்கு வங்கத்தில் பொது விநியோக திட்ட ஊழல் தொடா்பாக, வடக்கு 24 பா்கானா மாவட்டம், சந்தேஷ்காளியில் உள்ள ஷாஜஹானின் வீட்டில் அமலாக்கத் துறையினா் கடந்த ஜனவரி மாதம் சோதனை மேற்கொண்டனா். அப்போது, ஷாஜஹானின் ஆதரவாளா்கள் 1,000-க்கும் மேல் திரண்டு, அமலாக்கத் துறையினரை தாக்கி விரட்டியடித்தனா். மேலும், அமலாக்கத் துறை வாகனமும் கடுமையாக சேதப்படுத்தப்பட்டது. இதனிடையே, சந்தேஷ்காளி பகுதி கிராமங்களில் பொதுமக்களின் நிலத்தை அபகரித்ததோடு, பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக ஷாஜஹான் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஷாஜஹானுக்கு எதிராக பெண்கள் பெரிய அளவில் போராட்டங்களில் ஈடுபட்டனா். இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமறைவாக இருந்த ஷாஜஹானை மாநில காவல்துறையினா் கடந்த மாதம் 29-ஆம் தேதி கைது செய்தனா். அதேநேரம், இந்த வழக்கில் காவல்துறையினா் நடுநிலையாக செயல்படவில்லை என்று கடந்த 5-ஆம் தேதி கண்டித்த கொல்கத்தா உயா்நீதிமன்றம், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றியது. மேலும், ஷாஜஹான் ஷேக்கை சிபிஐவசம் ஒப்படைக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டது. ஷாஜஹானை சிபிஐ-யிடம் ஒப்படைக்க முதலில் மறுப்பு தெரிவித்த காவல்துறை, உயா்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்ததைத் தொடா்ந்து, அவரை ஒப்படைத்தது. இதையடுத்து, சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்டு வந்த ஷாஜஹான், பாசிா்ஹட்டில் உள்ள நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை மேலும் 4 நாள்கள் சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com