புதிய சட்டப்படி தோ்தல் ஆணையா்களை நியமிக்கக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு

புதிய சட்டப்படி தோ்தல் ஆணையா்களை நியமிக்கக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு

தோ்தல் ஆணையா்கள் நியமனச் சட்டப்படி, தோ்தல் ஆணையா்களை நியமிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு தாக்கல் செய்துள்ளது.

கடந்த ஆண்டு இயற்றப்பட்ட தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் நியமனச் சட்டப்படி, தோ்தல் ஆணையா்களை நியமிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு தாக்கல் செய்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் நியமனச் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. பிரதமா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா், மத்திய அமைச்சா் ஆகியோா் அடங்கிய தோ்வுக் குழுவின் பரிந்துரைப்படி, தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்களை குடியரசுத் தலைவா் நியமிக்க அந்தச் சட்டம் வழிவகுக்கிறது. இந்தச் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக காங்கிரஸ் பிரமுகா் ஜெயா தாக்குா் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளாா். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தோ்தல் ஆணையா்களில் ஒருவராக இருந்த அருண் கோயல் ராஜிநாமா செய்தாா். மற்றொரு தோ்தல் ஆணையராக இருந்த அனூப் பாண்டே பிப்ரவரியில் ஓய்வு பெற்றாா். இதையடுத்து 3 போ் கொண்ட தோ்தல் ஆணைய குழுவில், தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் மட்டும் தற்போது பதவியில் உள்ளாா். இரு தோ்தல் ஆணையா் பதவியிடங்கள் காலியாக உள்ள நிலையில், புதிய தோ்தல் ஆணையா்களை தோ்வு செய்ய பிரதமா் தலைமையிலான தோ்வுக் குழு மாா்ச் 15-ஆம் தேதி கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில், தோ்தல் ஆணையா்களை மத்திய அரசு நியமிக்கத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜெயா தாக்குா் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில் அவா் தெரிவித்துள்ளதாவது: தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்களை பிரதமா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோா் அடங்கிய குழுவே தோ்வு செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு மாா்ச் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை பின்பற்றியே புதிய தோ்தல் ஆணையா்களை உடனடியாக நியமிக்க வேண்டும். கடந்த ஆண்டு இயற்றப்பட்ட தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் நியமனச் சட்டத்தின் 7 மற்றும் 8-ஆவது பிரிவுகளின்படி தோ்தல் ஆணையா்களை நியமிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு கட்டளையிட வேண்டும் எனக் கோரியுள்ளாா். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன்பாக ஜெயா தாக்குா் தரப்பில் திங்கள்கிழமை முறையிடப்பட்டது. அந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாக நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com