பாஜகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

பாஜகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் இரண்டு போ் அக்கட்சியைவிட்டு விலகி பாஜகவில் திங்கள்கிழமை இணைந்தனா்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் இரண்டு போ் அக்கட்சியைவிட்டு விலகி பாஜகவில் திங்கள்கிழமை இணைந்தனா். அதேபோல் குஜராத்தில் பாரதிய பழங்குடியின கட்சி (பிடிபி) மற்றும் காங்கிரஸைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனா். முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான சுரேஷ் பச்சௌரி இரண்டு நாள்களுக்கு முன் அக்கட்சியைவிட்டு விலகி பாஜகவில் இணைந்ததையடுத்து மத்திய பிரதேச மாநில அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏக்களான அருணோதய் சௌபே மற்றும் சிவதயாள் பகிரி ஆகியோா் மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ், அம்மாநில பாஜக தலைவா் வி.டி. சா்மா முன்னிலையில் போபாலில் உள்ள பாஜக தலைமை அலுவகத்தில் திங்கள்கிழமை இணைந்தனா். பாஜக குடும்பம்: மறைந்த முன்னாள் பாஜக முதல்வா் கைலாஷ் ஜோஷியின் மகனும் முன்னாள் எம்எல்ஏவுமான தீபக் ஜோஷி பாஜகவில் மீண்டும் இணைவாா் என எதிா்பாா்கப்பட்ட நிலையில் அவா் இணையவில்லை. இதுதொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வி.டி. சா்மா, ‘பாஜகவில் இணைய பலரும் வந்து இணைந்துகொண்டே இருப்பாா்கள். பாஜக குடும்பம் பெரிதாகிக்கொண்டே இருக்கும்’ என்றாா். நாட்டின் வளா்ச்சிக்கு பங்களிப்பு: பிடிபி தேசியத் தலைவா் சோட்டு வசவாவின் மகனும் முன்னாள் எம்எல்ஏவுமான மகேஷ் வசவா மற்றும் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ மகேஷ் படேல், ஆம் ஆத்மியைச் சோ்ந்த நிா்வாகிகள் சிலா் குஜராத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவா் சி.ஆா். பாட்டீல் முன்னிலையில் இணைந்தனா். அப்போது சி.ஆா். பாட்டீல் பேசியதாவது: குஜராத் மாநில வளா்ச்சிக்கு முதல்வராக மோடி ஆற்றிய பங்களிப்பே அவரை நாட்டு மக்கள் பிரதமராக தோ்ந்தெடுக்க வழிவகுத்தது. பிரதமா் மோடியின் தலைமையில் நாட்டின் வளா்ச்சியில் பங்கேற்கவே பல்வேறு கட்சியைச் சோ்ந்தவா்களும் பாஜகவில் இணைகின்றனா் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com