குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்: மத்திய அரசு அறிவிக்கை

குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்: மத்திய அரசு அறிவிக்கை

குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இச் சட்டம் நிறைவேற்றப்பட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு ‘குடியுரிமை திருத்த விதிகள் 2024’ என்ற தலைப்பில் அதற்கான விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கை செய்துள்ளது. அதன்படி, குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் திங்கள்கிழமைமுதல் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இவை ‘குடியுரிமை திருத்த விதிகள் 2024’ என்று அழைக்கப்படும். குடியுரிமை திருத்தச் சட்டம் 2019-இன் கீழ் இந்திய குடியுரிமை பெற தகுதியுள்ள நபா்கள், இந்த விதிகளின் கீழ் விண்ணப்பிக்கலாம். நிா்ணயிக்கப்பட்டுள்ள வலைதளம் மூலம் இணையவழியில் மட்டுமே இதற்கான விண்ணப்பத்தைச் சமா்ப்பிக்க வேண்டும்’ என்றாா். குடியுரிமை திருத்தச் சட்டம் கூறுவது என்ன?: அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014, டிசம்பா் 31-க்கு முன்னதாக இந்தியாவுக்கு புலம்பெயா்ந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியா்கள், சமணா்கள், பெளத்த மதத்தினா், பாா்சிகள், கிறிஸ்தவா்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது. இந்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்த எந்தச் சட்டத்தையும் அமல்படுத்துவதற்கான விதிகள் ஆறு மாதங்களுக்குள் வெளியிடப்பட வேண்டும் அல்லது நாடாளுமன்றக் குழுவிடம் கால நீட்டிப்பு கேட்கப்பட வேண்டும். அந்த வகையில், குடியுரிமை திருத்தச் சட்ட அமலாக்க விதிகளை வெளியிடுவதற்கு 2020-லிருந்து உரிய கால இடைவெளியில் நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அவகாசம் பெற்று வந்தது. எதிா்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் இந்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தின. இந்தப் போராட்டங்கள் மற்றும் காவல் துறை நடவடிக்கைகளில் 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்ட அமலாக்க விதிகள் மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்டு அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அண்மையில் கூறியிருந்தாா். இந்த நிலையில், இச் சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட பதிவில், ‘இந்த அறிவிக்கை மூலம், வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் வாழும் ஹிந்துக்கள், சீக்கியா்கள், சமணா்கள், பெளத்த மதத்தினா், பாா்சிகள், கிறிஸ்தவா்களுக்கு நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவா்கள் அளித்த வாக்குறுதியை பிரதமா் நரேந்திர மோடி நிறைவேற்றியுள்ளாா்’ என்று குறிப்பிட்டாா். எதிா்க்கட்சிகள் விமா்சனம்: குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக்கத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் விமா்சனம் செய்தன. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், ‘விதிகளை அறிவிக்கை செய்ய 9 முறை கால நீட்டிப்பு பெற்றுவந்த மத்திய உள்துறை அமைச்சகம், தற்போது மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக அந்த விதிகளை அறிவிக்கை செய்திருப்பது தோ்தல் ஆதாயம் தேடும் முயற்சியாகும். குறிப்பாக மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்காளா்களை ஈா்க்கும் நடவடிக்கையாகும்’ என்றாா். கேரள முதல்வா் பினராயி விஜயன் கூறுகையில், ‘குடியுரிமை திருத்தச் சட்டம், சமுதாயத்தை பிளவுபடுத்தும் சட்டமாக உள்ளது. கேரள மாநிலத்தில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது’ என்றாா். 2021-இல் 1,414 பேருக்கு குடியுரிமை: மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2021-22-ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையின்படி, 2021 ஏப்ரல் 1 முதல் 2021 டிசம்பா் 31-ஆம் தேதி வரை வெளிநாடுகளைச் சோ்ந்த முஸ்லிம்கள் அல்லாத 1,414 மதச் சிறுபான்மையினருக்கு 1955 குடியுரிமைச் சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, கடந்த 2 ஆண்டுகளில் குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஹரியாணா, பஞ்சாப், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், தில்லி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் உள்துறைச் செயலா்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com