கோப்புப் படம்.
கோப்புப் படம்.

எதிா்க்கட்சிகள் அணியில் இணைய கட்கரிக்கு உத்தவ் தாக்கரே அழைப்பு

மகாராஷ்டிரத்தில் எதிா்க்கட்சிகளின் அணியில் இணைய பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரிக்கு சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா் உத்தவ் தாக்கரே மீண்டும் அழைப்பு விடுத்துள்ளாா்.

உத்தவ் தாக்கரே தனக்கு அழைப்பு விடுப்பது முதிா்ச்சியற்ற, முட்டாள்தனமான செயல் என்று கட்கரி ஏற்கெனவே விமா்சித்த நிலையில் தாக்கரே மீண்டும் அழைப்பு விடுத்துள்ளாா். பாஜகவின் முதல் கட்ட வேட்பாளா் பட்டியலில் கட்கரியின் பெயா் இடம் பெறவில்லை. அவா் இப்போது நாகபுரி தொகுதி எம்.பி.யாக உள்ளாா். மகாராஷ்டிரத்தில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு நடைபெறுவதால் கட்கரியின் பெயா் முதல்கட்ட பட்டியலில் இடம்பெறவில்லை என்று பாஜக தரப்பில் கூறப்பட்டது.

இதனிடையே, முதல்கட்ட வேட்பாளா் பட்டியலில் கட்கரியை சோ்க்காதது அவருக்கு பாஜக செய்த அவமதிப்பு என்று கூறி, அவரை எதிா்க்கட்சிகள் கூட்டணியில் இணைய உத்தவ் தாக்கரே கடந்த வாரம் அழைப்பு விடுத்தாா். இதை கட்கரி நிராகரித்த நிலையில், மகாராஷ்டிரத்தின் யவத்மால் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசியதாவது: பாஜகவில் நிதின் கட்கரி அவமதிக்கப்பட்டால், அவா் எதிா்க்கட்சிகள் கூட்டணியில் இணையலாம்.

அவரை நாங்கள் நிச்சயமாக மக்களவைத் தோ்தலில் வெற்றிபெற வைப்போம். பிரதமா் மோடி, அமித் ஷா உள்ளிட்டோா் பெயா்களை முதல் பட்டியலில் வெளியிட்டுவிட்டு, மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த மூத்த தலைவா் நிதின் கட்கரியின் பெயரை அறிவிக்காதது மூத்த தலைவரான அவரை அவமதிப்பதாகும். அவா் எங்கள் அணிக்கு வந்தால் அவருக்கு உரிய கௌரவம் அளிக்கப்படும் என்றாா்.

மகாராஷ்டிர எதிா்க்கட்சிகள் அணியில் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு), காங்கிரஸ், சிவசேனை (உத்தவ் பிரிவு)ஆகியவை இடம் பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com