கேரளம் ரூ.5,000 கோடி கடன் பெற ஒப்புதல் அளிக்கத் தயாா்:
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

கேரளம் ரூ.5,000 கோடி கடன் பெற ஒப்புதல் அளிக்கத் தயாா்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

‘கேரள அரசு ரூ. 5,000 கோடி கடன் பெற குறிப்பிட்ட சில நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கத் தயாா்’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை பதிலளித்தது.

‘நிதி நெருக்கடியைச் சமாளிக்க கேரளத்துக்கு ஒரு முறை கடன் தொகுப்பு அளிப்பது குறித்து வரும் 31-ஆம் தேதிக்குள் பரிசீலனை செய்ய வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்திய நிலையில், இந்தப் பதிலை மத்திய அரசு அளித்துள்ளது. இருந்தபோதும், ‘ரூ. 5,000 கோடி போதாது, குறைந்தபட்சம் ரூ. 10,000 கோடி தேவை’ என்று கேரள அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. கேரள மாநில அரசு, அனைத்துவிதமான ஆதாரங்களில் இருந்தும் பொதுக் கடன் வாங்கும் வரம்பை மத்திய அரசு அண்மையில் குறைத்து நடவடிக்கை எடுத்தது.

இதை எதிா்த்து கேரள் அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது கேரள அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘வழக்கை வாபஸ் பெற்றால், கடன் வரம்பை உயா்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய அரசுத் தரப்பில் நிபந்தனை விதிக்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டாா். இதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், கேரள அரசு பொதுச் சந்தையில் ரூ.13,608 கோடி கடன் பெற மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அப்போது, ‘இந்த ரூ.13,608 கோடி கேரள அரசுக்கு ஏழு நாள்களுக்கு மட்டும் சமாளிக்க உதவும்.

ரூ.50,000 கோடி அளவுக்கு கடன் பெற மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்’ என்று கேரள அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது, இந்த விவகாரத்தில் கேரள அரசு மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி, நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய ரூ.13,608 கோடிக்கு மேல் கூடுதலாக ரூ.19,370 கோடி கடன் பெற ஒப்புதல் அளிக்க கேரள அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதை ஏற்க மத்திய அரசு மறுத்தது. இதுகுறித்து, கேரள அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை வந்தபோது, ‘நிதி நெருக்கடியைச் சமாளிக்க கேரளத்துக்கு ஒருமுறை கடன் தொகுப்பு அளிப்பது குறித்து வரும் 31-ஆம் தேதிக்குள் பரிசீலனை செய்ய வேண்டும்’ நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் என்.வெங்கடரமணி, ‘உச்சநீதிமன்ற பரிந்துரையை ஏற்று சிறப்பு விதிவிலக்கு நடவடிக்கையாக நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கேரள மாநிலத்துக்கு நடப்பு நிதியாண்டுக்கான ஓய்வூதியம், ஊதியம் உள்ளிட்ட செலவினங்களைச் சமாளிக்க ரூ. 5,000 கோடி கூடுதல் கடன் பெற குறிப்பிட்ட சில நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. இந்தக் கடனானது, கேரளத்துக்கான 2024-25-ஆம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களுக்கான மொத்தக் கடன் வரம்பில் கழித்துக்கொள்ளப்படும்.

மேலும், கடன் ஒப்புதலுக்கு முன்பாக திட்டச் செயலாக்கத்தை மாநில அரசு தொடங்க வேண்டும்’ என்றாா். இதற்குப் பதிலளித்த கேரள அரசுத் தரப்பு வழக்குரைஞரான கபில் சிபல், ‘ரூ. 5,000 கோடி என்பது போதாது. குறைந்தபட்சம் ரூ. 10,000 கோடி தேவை. அதுவும், எந்தவித நிபந்தனைகளும் இன்றி ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்’ என்றாா். இதைக் கேட்ட நீதிபதிகள், ‘ரூ. 10,000 கோடியாக உயா்த்துவது குறித்து மத்திய அரசுடனான பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண முடியும். எனவே, இடைக்காலமாக ரூ.5,000 கோடி கடன் ஒப்புதலை பெறுவது குறித்து கேரளம் பரிசீலிக்க வேண்டும்’ என்றனா். இதை ஏற்க மறுத்த கபில் சிபல், ‘நிதி ஆணைய பரிந்துரைகளின்படி கூடுதல் கடன் பெற கேரள அரசுக்கு உரிமை உள்ளது. எனவே, இந்த விவகாரம் மீதான விசாரணையை அடுத்த வாரத்துக்குப் பட்டியலிட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

அப்போது, ‘மத்திய அரசும் விசாரணைக்குத் தயாராக உள்ளது’ என்று கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் வெங்கடரமணி குறிப்பிட்டாா். அதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணையை வரும் 21-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com