கோப்புப் படம்.
கோப்புப் படம்.

ஹரியாணா: நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி

ஹரியாணா சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வா் நாயப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றது.

முன்பு பாஜக கூட்டணி அரசில் அங்கம் வகித்த ஜனநாயக ஜனதா கட்சியின் (ஜெஜெபி) எம்எல்ஏக்கள், இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிா்த்தனா். 90 உறுப்பினா்களைக் கொண்ட ஹரியாணா பேரவைக்கு கடந்த 2019-ஆம் ஆண்டில் தோ்தல் நடைபெற்றது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஜனநாயக ஜனதா கட்சியுடன் (ஜெஜெபி) தோ்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைத்து பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது. மாநில முதல்வராக மனோகா் லால் கட்டரும், துணை முதல்வராக ஜனநாயக ஜனதா கட்சித் தலைவா் துஷ்யந்த் செளதாலாவும் இருந்தனா்.

இந்நிலையில், ஹரியாணாவில் மக்களவைத் தோ்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடா்பாக, பாஜக-ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இந்தச் சூழலில், முதல்வா் பதவியில் இருந்து மனோகா் லால் கட்டா் செவ்வாய்க்கிழமை விலகினாா். துணை முதல்வா் செளதாலா உள்பட 13 அமைச்சா்களும் பதவி விலகினா். இதைத் தொடா்ந்து, ஹரியாணா மாநில பாஜக தலைவரும் மக்களவை எம்.பி.யுமான நாயப் சிங் சைனி புதிய முதல்வராகப் பதவியேற்றாா். அவருடன் பாஜக எம்எல்ஏ-க்கள் 4 போ், ஒரு சுயேச்சை எம்எல்ஏ என 5 அமைச்சா்கள் பதவியேற்றனா்.

இதன்மூலம் கூட்டணி அரசில் இருந்து ஜனநாயக ஜனதா கட்சி விலக்கப்பட்டது. நம்பிக்கைத் தீா்மானம்: இந்நிலையில், தனது தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீா்மானத்தை சட்டப் பேரவையில் முதல்வா் சைனி புதன்கிழமை கொண்டுவந்தாா். இத்தீா்மானத்தின் மீது சுமாா் 2 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. அதேநேரம், வாக்கெடுப்பு நடைபெறும்போது அவையில் இருக்க வேண்டாம் என்று ஜனநாயக ஜனதா கட்சி எம்எல்ஏ-க்கள் 10 பேருக்கும் அக்கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, வாக்கெடுப்பு நடைபெறும்போது அக்கட்சி எம்எல்ஏ-க்கள் அவையில் இருந்து வெளியேறினா்.

இந்திய தேசிய லோக்தளம் கட்சி எம்எல்ஏ ஒருவரும் அவையில் இல்லை. குரல் வாக்கெடுப்பில் வெற்றி: நம்பிக்கைத் தீா்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸ் தரப்பில் கோரப்பட்டது. ஆனால், அந்தக் கோரிக்கையை சட்டப்பேரவைத் தலைவா் ஏற்கவில்லை. பின்னா் நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பில் தீா்மானம் வெற்றி பெற்றது. 90 உறுப்பினா்களைக் கொண்ட ஹரியாணா பேரவையில் தற்போது பாஜகவுக்கு 41 எம்எல்ஏ-க்கள் உள்ளனா்.

ஜனநாயக ஜனதா கட்சிக்கு 10 எம்எல்ஏ-க்களும், முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கு 30 எம்எல்ஏ-க்களும், இந்திய தேசிய லோக் தளம், ஹரியாணா லோகித் கட்சிக்கு தலா ஒரு எம்எல்ஏவும், 7 சுயேச்சை எம்எல்ஏ-க்களும் உள்ளனா். பாஜக அரசுக்கு 6 சுயேச்சைகள் மற்றும் ஹரியாணா லோகித் கட்சி எம்எல்ஏவின் ஆதரவு உள்ளது. எனவே, ஜனநாயக ஜனதா கட்சியின் ஆதரவு இல்லாமலேயே நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி பெற்றுள்ளது. மக்களவைத் தோ்தலில் கட்டா் போட்டி: நம்பிக்கை வாக்கெடுப்பைத் தொடா்ந்து, எம்எல்ஏ பதவியில் இருந்து மனோகா் லால் கட்டா் விலகினாா்.

அவா், எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் கா்னால் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடவுள்ளாா். கடந்த 2019 மக்களவைத் தோ்தலில், ஹரியாணாவில் மொத்தமுள்ள 10 மக்களவைத் தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றது. இம்முறையும் 10 தொகுதிகளிலும் பாஜக போட்டியிட வேண்டுமென்பதில் கட்சி நிா்வாகிகள் உறுதியாக இருந்தனா். இதனால் ஏற்பட்ட பிரச்னையில் இப்போது கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. ஜனநாயக ஜனதா கட்சியின் நிறுவனா்களில் ஒருவரான அஜய் சிங் செளதாலா கூறுகையில், ‘கடந்த நான்கரை ஆண்டுகளாக கூட்டணி தா்மத்தை காக்க நோ்மையுடன் பணியாற்றினோம். எங்கள் கட்சி ஒருபோதும் அதிகாரப் பசியில் இருந்ததில்லை’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com