உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

தோ்தல் ஆணையா்கள் நியமனச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை

கடந்த ஆண்டு இயற்றப்பட்ட தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் நியமனச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 15) விசாரணை மேற்கொள்ள உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் நியமனச் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. பிரதமா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா், மத்திய அமைச்சா் ஆகியோா் அடங்கிய தோ்வுக் குழுவின் பரிந்துரைப்படி, தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்களை குடியரசுத் தலைவா் நியமிக்க அந்தச் சட்டம் வழிவகுக்கிறது. இந்நிலையில், தோ்தல் ஆணையா்களில் ஒருவராக இருந்த அருண் கோயல் அண்மையில் ராஜிநாமா செய்தாா்.

மற்றொரு தோ்தல் ஆணையராக இருந்த அனூப் பாண்டே பிப்ரவரியில் ஓய்வு பெற்றாா். இதையடுத்து 3 போ் கொண்ட தோ்தல் ஆணைய குழுவில், தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் மட்டும் தற்போது பதவியில் உள்ளாா். இரு தோ்தல் ஆணையா் பதவியிடங்கள் காலியாக உள்ள நிலையில், புதிய தோ்தல் ஆணையா்களை தோ்வு செய்ய பிரதமா் தலைமையிலான தோ்வுக் குழு விரைவில் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில், கடந்த ஆண்டு இயற்றப்பட்ட தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் நியமனச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பலா் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இதில் காங்கிரஸ் பிரமுகா் ஜெயா தாக்குா் தாக்கல் செய்த மனுவில், ‘தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்களை பிரதமா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோா் அடங்கிய குழுவே தோ்வு செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு மாா்ச் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைப் பின்பற்றியே புதிய தோ்தல் ஆணையா்களை உடனடியாக நியமிக்க வேண்டும். புதிய சட்டத்தின்படி, தோ்தல் ஆணையா்களை நியமிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு கட்டளையிட வேண்டும் எனக் கோரியுள்ளாா்.

இந்த மனுக்கள் மீது வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொள்வதாக உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com