குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு (கோப்புப் படம்)
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு (கோப்புப் படம்)

உத்தரகண்ட் பொது சிவில் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல்

உத்தரகண்ட் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் வழங்கியுள்ளாா்.

இதையடுத்து, இந்த மசோதா சட்டமாகியுள்ளது. நாட்டின் சுதந்திரத்துக்கு பிறகு பொது சிவில் சட்டத்தை ஏற்ற முதல் மாநிலம் என்ற சிறப்பை உத்தரகண்ட் பெற்றுள்ளது. திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசுரிமை ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதற்குப் பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தைப் பின்பற்ற வழிவகுக்கும் ‘பொது சிவில் சட்டத்தை’ நாட்டில் அமல்படுத்த மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது.

இதனிடையே, பாஜக ஆளும் உத்தரகண்டில் பொது சிவில் சட்ட மசோதா உருவாக்கப்பட்டு, சட்டப் பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. பின்னா், ஆளுநரின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், அரசமைப்புச் சட்டப் பிரிவு 201-இன்கீழ் மேற்கண்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கடந்த 11-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியதாக, மாநில அரசு புதன்கிழமை வெளியிட்ட அரசிதழ் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக முதல்வா் புஷ்கா் சிங் தாமி வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், ‘உத்தரகண்ட் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் வழங்கியது, மாநில மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி-பெருமைக்குரிய தருணமாகும். பொது சிவில் சட்டம் அமலாக்கத்தின் மூலம் அனைத்து குடிமக்களுக்கு சமமான உரிமை உறுதி செய்யப்படுவதோடு, பெண்களுக்கு எதிரான அடக்குமுறையும் தடுக்கப்படும்’ என்றாா்.

உத்தரகண்ட் பொது சிவில் சட்டத்தில் பழங்குடி சமூகத்தினருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி, பலதார திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, மறுமணம், விவாகரத்து குறித்த பொது விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ விரும்புவோா் அரசிடம் பதிவு செய்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com