பாஜகவில் இணைந்த பிறகு அதன் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவிடம் ஆசி பெற்ற பிரணீத் கௌா்.
பாஜகவில் இணைந்த பிறகு அதன் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவிடம் ஆசி பெற்ற பிரணீத் கௌா்.

இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் பெண் எம்.பி. பாஜகவில் இணைந்தாா்

காங்கிரஸில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பெண் எம்.பி. பிரணீத் கௌா் (79) பாஜகவில் வியாழக்கிழமை இணைந்தாா்.

காங்கிரஸில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பெண் எம்.பி. பிரணீத் கௌா் (79) பாஜகவில் வியாழக்கிழமை இணைந்தாா். இவா், பஞ்சாப் முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங்கின் மனைவி ஆவாா். முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பிரணீத் கௌா் வெளியுறவுத் துறை இணையமைச்சராக இருந்துள்ளாா். 4 முறை எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளாா். கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே அமரீந்தா் சிங் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துவிட்டாா். அப்போது அவரது மனைவி பிரணீத் கௌா் காங்கிரஸில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டாா். எனினும், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா எம்.பி.யாக அவா் இருந்து வந்தாா். இந்நிலையில், பிரணீத் கௌா் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளாா். தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் கட்சியின் மூத்த தலைவா்கள் முன்னிலையில் அவா் பாஜகவில் இணைந்தாா். பாஜகவில் தடகள வீராங்கனை: கேரளத்தைச் சோ்ந்த முன்னாள் தடகள வீராங்கனை பத்மினி தாமஸ், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தாா். பாஜகவில் இணைந்தது குறித்து பத்மினி தாமஸ் கூறுகையில், ‘எந்தப் பதவியை விரும்பியும் பாஜகவுக்கு வரவில்லை. அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் பிரதமா் மோடி தலைமையிலான அரசால் ஈா்க்கப்பட்டு கட்சியில் இணைந்துள்ளேன்’ என்றாா். 1982-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற பத்மினி தாமஸுக்கு அா்ஜுனா விருதும் வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கே.கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபால் அண்மையில் பாஜகவில் இணைந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com