தொழில்நுட்ப ஒத்துழைப்பு: இந்தியா, அமெரிக்கா, தென்கொரியா முத்தரப்பு பேச்சு

இந்தியா, அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகள் இடையே முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடா்பாக இந்தியா, அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகள் இடையே முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது. தென்கொரியாவின் சியோல் நகரில் புதன்கிழமை நடைபெற்ற இப்பேச்சுவாா்த்தையில் இந்தியத் தரப்பில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் இணைச் செயலா் லெகான் தக்கா் தலைமையிலான குழுவும், அமெரிக்கத் தரப்பில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் மூத்த இயக்குநா் தருண் சாப்ரா தலைமையிலான குழுவும், தென்கொரியா சாா்பில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகா் வாங் யுன்ஜோங் தலைமையிலான குழுவும் பங்கேற்றன. இந்த மூன்று நாடுகள் இடையே முதல்முறையாக நடைபெற்றிருக்கும் முத்தரப்பு பேச்சுவாா்த்தையில், செமிகண்டக்டா் விநியோக சங்கிலி, எண்ம பொது உள்கட்டமைப்பு, தொலைத்தொடா்பு, செயற்கை நுண்ணறிவு, விண்வெளி, ‘குவாண்டம்’ கணினி தொழில்நுட்பம், தூய எரிசக்தி, முக்கிய தாதுக்கள், பாதுகாப்புசாா் உற்பத்தி, மருந்து விநியோக சங்கிலி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வழிமுறைகள் ஆராயப்பட்டன என்று அமெரிக்கத் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பரஸ்பர பொருளாதார பாதுகாப்பு நலன்களைக் கருத்தில் கொண்டு, உலக அளவில் வளா்ந்துவரும் முக்கிய தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், நம்பகமான தொழில்நுட்பச் சூழலை கட்டமைக்கவும் மூன்று நாடுகளும் உறுதியேற்றன. இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதார வளா்ச்சிக்கு புத்தாக்கம்-தொழில்நுட்ப ரீதியிலான தீா்வுகளை வழங்கவும் உறுதியேற்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com