தேர்தல் பத்திரங்கள் ஓர் பரிசோதனை முயற்சி: ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் ஹொசபாலே

தேர்தல் பத்திரங்கள் என்பவை ஒரு பரிசோதனை முயற்சி.
தேர்தல் பத்திரங்கள் ஓர் பரிசோதனை முயற்சி:  ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் ஹொசபாலே
-

நாகபுரி: "தேர்தல் பத்திரங்கள் என்பவை ஒரு பரிசோதனை முயற்சி. அவை எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்பதற்கு காலம்தான் பதிலளிக்க வேண்டும்' என்று ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபாலே தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளராக தத்தாத்ரேய ஹொசபாலேவை அந்த அமைப்பின் அகில பாரதிய பிரதிநிதி சபை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தேர்வு செய்தது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் இந்தப் பொறுப்பை வகிப்பார். இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் குறித்து தத்தாத்ரேய ஹொசபாலேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

தேர்தல் பத்திரங்கள் என்பவை ஒரு பரிசோதனை முயற்சி. அது குறித்து ஆர்எஸ்எஸ் இன்னமும் விவாதிக்கவில்லை.

தேர்தல் பத்திரங்கள் திடீரென்று அறிமுகம் செய்யப்படவில்லை. இதற்கு முன்பும் இவை கொண்டுவரப்பட்டுள்ளன. எப்போது ஒரு மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டாலும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டபோதும் அவை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

புதிய விஷயங்கள் அறிமுகமாகும்போது மக்களால் கேள்விகள் எழுப்பப்படுவது இயல்புதான். தேர்தல் பத்திரங்கள் எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்பதற்கு காலம்தான் பதிலளிக்க வேண்டும்.

நரேந்திர மோடி அரசின் பத்தாண்டு கால ஆட்சியைப் பொறுத்தவரை, பொது சிவில் சட்டத்தை ஆர்எஸ்எஸ் வரவேற்கிறது. அதை அமல்படுத்துமாறு ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரதிநிதி சபையில் சில ஆண்டுகளுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமலாகியுள்ளது. இச்சட்டத்தை நாடு முழுவதும் அமலாக்க வேண்டும் என்ரு நாங்கள் விரும்புகிறோம். வாரிசு, தத்தெடுப்பு, திருமணம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது. அதன் பிறகே பொது சிவில் சட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

மத்தியில் பாஜக அரசின் பத்தாண்டு கால ஆட்சியில் மக்கள் முன்னேற்றத்தைக் கண்டுள்ளனர். தற்போதைய நூற்றாண்டு என்பது இந்தியாவின் நூற்றாண்டு என்று பிரபலமான சர்வதேச நிபுணர்களும் அரசியல் சிந்தனையாளர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய பாஜக ஆட்சி குறித்த தீர்ப்பை மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதி மக்கள் வழங்குவார்கள்.

மதுரா, காசி ஆகிய இடங்களில் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான தகராறுகள் குறித்துக் கேட்கிறீர்கள். இந்த விவகாரத்தை ஹிந்து மதத் துறவிகளும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரும் எழுப்பியுள்ளனர்.

ராஜ ஜென்மபூமி இயக்கத்துக்கு செய்யப்பட்டதை அனைத்து விவகாரங்களுக்கும் செய்யத் தேவையில்லை. மதுரா, காசி ஆகிய இடங்களில் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதை நீதிமன்றம் தீர்த்து வைக்கும். இதற்காகப் போராட வேண்டியதில்லை

என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com