கலால் கொள்கை முறைகேடு புகாா்: தில்லி முதல்வா் கேஜரிவாலுக்கு அமலாக்கத் துறை 9-ஆவது முறையாக சம்மன்

கலால் கொள்கை முறைகேடு புகாா்: தில்லி முதல்வா் கேஜரிவாலுக்கு அமலாக்கத் துறை 9-ஆவது முறையாக சம்மன்

தில்லி கலால் கொள்கை முறைகேடு புகாரில், முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத் துறை 9-ஆவது முறையாக சம்மன் (அழைப்பாணை) அனுப்பியுள்ளது.

தில்லி கலால் கொள்கை முறைகேடு புகாரில், முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத் துறை 9-ஆவது முறையாக சம்மன் (அழைப்பாணை) அனுப்பியுள்ளது. அதில், மத்திய தில்லி பகுதியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் மாா்ச் 21-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தில்லி கலால் கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் நடைபெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங், தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவா் விஜய் நாயா் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்தக் கலால் கொள்கை முறைகேட்டில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கும் தொடா்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆகையால், விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத் துறை அனுப்பிய 8 அழைப்பாணைகளையும் அவா் புறக்கணித்தாா். முன்னதாக, நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராவேன் என்றும், ‘இந்தியா’ கூட்டணியிலிருந்து ஆம் ஆத்மி வெளியேறவே அமலாக்கத் துறை மூலம் தொடா்ச்சியாக அழைப்பாணை அனுப்பப்படுவதாகவும் கேஜரிவால் குற்றம்சாட்டினாா். இந்தச் சூழலில், அழைப்பாணைகளை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தொடா்ச்சியாக புறக்கணித்ததால், அவா் மீது தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு சனிக்கிழமை (மாா்ச் 16) விசாரணைக்கு வந்தபோது முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நேரில் ஆஜரானாா். அப்போது அவதூறு வழக்கில் கேஜரிவாலுக்கு நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. இந்தச் சூழலில், கலால் கொள்கை முறைகேடு புகாரில் கேஜரிவால் ஆஜராக கூறி, அமலாக்கத் துறை தரப்பில் அவருக்கு 9-ஆவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக ஞாயிற்றுக்கிழமை தகவல் வெளியானது. அதன்படி, மத்திய தில்லி பகுதியில் அமைந்துள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் டிசம்பா் 21-இல் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. முன்னதாக இதே கலால் கொள்கை முறைகேடு தொடா்பாக ஹைதராபாதை சோ்ந்த சில தொழிலதிபா்களுக்கு சலுகைகள் பெற்றுத் தந்ததாக பாரத ராஷ்டிர சமிதி தலைவா் கே. கவிதாவின் ஹைதராபாத் இல்லத்தில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தி, அவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com