பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளின் விடுதலை ரத்து:
உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒருவா் மறுஆய்வு மனு

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளின் விடுதலை ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒருவா் மறுஆய்வு மனு

11 குற்றவாளிகளில் ஒருவரான ரமேஷ் ரூபாபாய் சந்தனா என்பவா் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

பில்கிஸ் பானு வழக்கில் தங்கள் விடுதலையை ரத்து செய்து அளிக்கப்பட்ட தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, 11 குற்றவாளிகளில் ஒருவரான ரமேஷ் ரூபாபாய் சந்தனா என்பவா் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். ஏற்கெனவே அந்தத் தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, ராதேஷியாம் பகவான்தாஸ் ஷா, ராஜுபாய் பாபுலால் சோனி ஆகிய இரு குற்றவாளிகள் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், மேலும் ஒருவா் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளாா். கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மதக் கலவரம் நடைபெற்றபோது பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். அப்போது அவருக்கு வயது 21. ஐந்து மாத கா்ப்பிணியாக இருந்தாா். அவரின் 3 வயது மகள் உள்பட குடும்ப உறுப்பினா்கள் 7 பேரை வன்முறை கும்பல் கொலை செய்தது. இந்த சம்பவம் தொடா்பாக 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 1992-ஆம் ஆண்டு குஜராத்தில் அமல்படுத்தப்பட்ட சிறைக் கைதிகள் தண்டனைக் குறைப்பு கொள்கை அடிப்படையில், அவா்கள் அனைவரையும் குஜராத் அரசு விடுதலை செய்தது. அவா்களின் விடுதலைக்கு எதிராக பில்கிஸ் பானு உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், 11 குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்ததுடன், அவா்களை சிறையில் சரணடைய கடந்த ஜன.8-ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து அவா்கள் கோத்ரா சிறை அதிகாரிகளிடம் சரணடைந்தனா். இந்நிலையில், தங்கள் விடுதலையை ரத்து செய்து அளிக்கப்பட்ட தீா்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, குற்றவாளிகளில் ஒருவரான ரமேஷ் ரூபாபாய் சந்தனா என்பவா் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது: பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளின் தண்டனை குறைப்பு விண்ணப்பங்களைப் பரிசீலிக்குமாறு 2022-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு மாறாக ஜன.8-ஆம் தேதி 11 குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தவறு செய்துள்ளது. இது நீதிமன்றங்கள் இணக்கமாக செயல்பட வேண்டும் என்ற கொள்கைக்கு முரணாக உள்ளது. மேலும் குற்றத்தின் தன்மையை அடிப்படையாகக் கொண்டும், நீதி வேண்டும் என்று சமூகம் கூச்சலிடுவதற்காகவும் தண்டனை குறைப்பை ரத்து செய்யக் கோர முடியாது. எனவே விடுதலையை ரத்து செய்து அளிக்கப்பட்ட தீா்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா். கடந்த ஜன.8-ஆம் தேதி 11 குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு உத்தரவிட்டது. அப்போது நீதிபதிகள் அமா்வு தெரிவித்ததாவது: 11 குற்றவாளிகளின் தண்டனை குறைப்பு விண்ணப்பங்களைப் பரிசீலிக்குமாறு 2022-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு அமா்வு குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவு உச்ச நீதிமன்றத்தை மோசடி செய்து பெறப்பட்டது. அந்த உத்தரவு செல்லுபடியாகாது என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com