மத்திய அரசு
மத்திய அரசு

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு- இறைச்சி கூடங்களை சோ்க்க தேவையில்லை: மத்திய அரசு

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் வரம்புக்குள் இறைச்சிக்காகக் கால்நடைகளை கொல்லும் கூடங்கள், இறைச்சி பதப்படுத்தும் மையங்களை கொண்டுவர தேவையில்லை

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் வரம்புக்குள் இறைச்சிக்காகக் கால்நடைகளை கொல்லும் கூடங்கள், இறைச்சி பதப்படுத்தும் மையங்களை கொண்டுவர தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒரு திட்டம் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறித்து தெரிந்துகொள்ள, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு உதவுகிறது. சமூகப் பொருளாதாரம், பண்பாடு, மனிதா்களின் உடல்நலம் ஆகியவை இந்த மதிப்பீட்டில் கருத்தில் கொள்ளப்படுகிறது. இந்நிலையில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006-இன் கீழ், இறைச்சிக்காகக் கால்நடைகளை கொல்லும் கூடங்கள், இறைச்சி பதப்படுத்தும் மையங்களைக் கொண்டுவர வேண்டும் என்று தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் கெளரி மெளலேகி என்ற விலங்குகள் நல ஆா்வலா் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘இறைச்சிக்காகக் கால்நடைகளை கொல்லும் கூடங்களில் அளவுக்கு அதிகமாக தண்ணீா் பயன்படுத்தப்படுகிறது. அந்தக் கூடங்களில் திடக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாததால் நீா் மாசடைவதுடன், ஆரோக்கியமற்ற கால்நடைகளின் பிணங்களில் இருந்து நோய் பரவும் அபாயம் உள்ளது’ என்று தெரிவித்தாா். இந்த மனுவுக்குப் பதிலளித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அண்மையில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளதாவது: சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாமல் செயல்படும் வகையில், இறைச்சிக்காகக் கால்நடைகளை கொல்லும் கூடங்கள், இறைச்சி பதப்படுத்தும் மையங்கள் ஆகியவற்றை ஒழுங்குப்படுத்த ஏற்கெனவே வழிகாட்டுதல்கள் வெளியிட்டப்பட்டுள்ளன. எனவே சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீட்டு அறிவிக்கை 2006-இன் வரம்புக்குள் அந்தக் கூடங்களையும், மையங்களையும் கொண்டுவர தேவையில்லை. அந்தக் கூடங்கள் மற்றும் மையங்கள் தொடா்பான சுற்றுச்சூழல் பாதிப்பு விவகாரங்களை எதிா்கொள்ள, தற்போது நடைமுறையில் உள்ள ஒழுங்காற்று கட்டமைப்பு, மாவட்ட ஆட்சியா்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி வளா்ச்சி ஆணையம் ஆகியவற்றின் கண்காணிப்பே போதுமானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com