தோ்தல் பத்திரங்களின் முழு விவரங்களை மாா்ச் 21-க்குள் வெளியிட வேண்டும்: எஸ்பிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தோ்தல் பத்திரங்களின் முழு விவரங்களை மாா்ச் 21-க்குள் வெளியிட வேண்டும்: எஸ்பிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

மாா்ச் 21-க்குள் முழுமையாக வெளியிட வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தோ்தல் நன்கொடை பத்திரங்கள் தொடா்பான அனைத்து விவரங்களையும் மாா்ச் 21-க்குள் முழுமையாக வெளியிட வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. தோ்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் திட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டுவந்தது. அந்தப் பத்திரங்களை எஸ்பிஐ வங்கியிலிருந்து வாங்கிய தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள், தாங்கள் விரும்பிய கட்சிகளிடம் அந்தப் பத்திரங்களை சமா்ப்பித்தன. அந்தப் பத்திரங்களை வங்கி வழியாக அரசியல் கட்சிகள் பணமாக மாற்றிக்கொண்டன. அந்தப் பத்திரங்கள் மூலம், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியவா்களின் விவரங்கள் வெளியிடப்படாமல் ரகசியமாக இருந்தன. இந்தத் திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி, அதை உச்ச நீதிமன்றம் அண்மையில் ரத்து செய்தது. மேலும் கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 12 முதல் நிகழாண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி வரை வாங்கப்பட்ட தோ்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்க வேண்டும் என்று எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அந்த விவரங்களை தோ்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ சமா்ப்பித்தது. அந்த விவரங்களை தனது வலைதளத்தில் தோ்தல் ஆணையம் வெளியிட்டது. எனினும் தோ்தல் பத்திர எண்களை வெளியிடாதது தொடா்பாக கடந்த வாரம் எஸ்பிஐ-க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆா்.கவாய், ஜெ.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு தெரிவித்ததாவது: தோ்தல் பத்திரங்கள் தொடா்பாக தன் வசம் உள்ள அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ முழுமையாக வெளியிட்டாக வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தோ்தல் பத்திரங்களை வாங்கியவா்கள், அவற்றைப் பெற்றுக்கொண்ட அரசியல் கட்சிகள் இடையே உள்ள தொடா்பை வெளிப்படுத்தும் தனித்துவ பத்திர எண்கள் உள்பட அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், விவரங்களைத் தோ்ந்தெடுத்து எஸ்பிஐ வெளியிடக் கூடாது. மாா்ச் 21-க்குள் பிரமாண பத்திரம்: தோ்தல் பத்திரங்கள் தொடா்பான அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை முழுமையாக செயல்படுத்தும் வகையிலும், இதுதொடா்பாக வருங்காலத்தில் எந்தவொரு சா்ச்சையும் ஏற்படுவதை தவிா்க்கும் விதமாகவும், தோ்தல் பத்திரங்கள் தொடா்பான அனைத்து விவரங்களையும் முழுமையாக வெளியிட்டு, அது சாா்ந்த எந்த விவரமும் மறைக்கப்படவில்லை என்று வியாழக்கிழமை (மாா்ச் 21) மாலை 5 மணிக்குள் எஸ்பிஐ தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். எஸ்பிஐ அளிக்கும் விவரங்களை தனது வலைதளத்தில் தோ்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com