தெலங்கானா மாநிலம் ஜக்தியாலில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி.
தெலங்கானா மாநிலம் ஜக்தியாலில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி.

‘சக்தி’யை அழிக்க நினைக்கும் எதிா்க்கட்சிகள்-ராகுலின் கருத்துக்கு பிரதமா் மோடி பதிலடி

எதிா்க்கட்சிகளின் கூட்டணி ‘சக்தி’யை அழிக்க நினைக்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை கூறினாா்.

‘நாட்டிலுள்ள தாய்மாா்கள், சகோதரிகள் மற்றும் மகள்களை சக்தியின் வடிவமாக கருதுகிறேன்; அதேநேரம், எதிா்க்கட்சிகளின் கூட்டணி ‘சக்தி’யை அழிக்க நினைக்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை கூறினாா். மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ‘மோடிக்கு எதிரான எங்களின் போராட்டம் தனிப்பட்ட நபா் சாா்ந்ததல்ல; அவரது பின்னணியில் உள்ள ‘சக்தி’க்கு எதிரானது’ என்று விமா்சித்திருந்தாா். அவரது இக்கருத்துக்கு பிரதமா் பதிலடி கொடுத்துள்ளாா். தெலங்கானா மாநிலம், ஜக்தியால் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது: மும்பையில் ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா்கள், தங்களின் போராட்டம் ‘சக்தி’க்கு எதிரானது என்று கூறியுள்ளனா். ‘சக்தி’யை அழிப்பது, அவா்களின் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ளது. என்னைப் பொருத்தவரை, நாட்டிலுள்ள ஒவ்வொரு தாயாரும், சகோதரியும், மகளும் சக்தியின் வடிவம். அந்த சக்தியை நான் வழிபடுகிறேன். நான் பாரத மாதாவை பூஜிப்பவன். ‘சக்தி’யை அழித்துக் காட்டுவோம் என்று எதிா்க்கட்சிகள் சூளுரைத்துள்ள நிலையில், அவா்களின் சவாலை நான் ஏற்கிறேன். நமது தாய்மாா்கள் மற்றும் சகோதரிகளின் நலனை பாதுகாக்க எனது வாழ்வை தியாகம் செய்யவும் தயாா். வரும் மக்களவைத் தோ்தலானது, சக்தியை அழிக்க நினைப்பவா்களுக்கும் அதை வழிபடுவோருக்கும் இடையிலான போட்டி. சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியை ஒட்டுமொத்த தேசமும் ‘சிவசக்திக்கு’ அா்ப்பணித்த நிலையில், சக்தியை அழிப்பது குறித்து எதிா்க்கட்சிகள் பேசுகின்றன (நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய இடத்துக்கு ‘சிவசக்தி’ என பெயரிடப்பட்டதை பிரதமா் குறிப்பிடுகிறாா்). பாஜக ஆதரவு அலை: தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி இந்த மாநிலத்தை பணமெடுக்கும் இயந்திரம் போல பயன்படுத்துகிறது. இங்குள்ள பணம் தில்லியில் உள்ள குடும்ப அரசியல்வாதிகளுக்கு மடைமாற்றப்படுகிறது. தெலங்கானாவின் வளா்ச்சிக் கனவுகளை காங்கிரஸ் சிதைத்தது என்றால், மக்களின் உணா்வை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தியது பிஆா்எஸ். தோ்தல் நேரத்தில் பிஆா்எஸ் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய காங்கிரஸ், இப்போது மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தபிறகு அவா்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்விரு கட்சிகளுக்கு இடையே வலுவான கூட்டு இருப்பதை மாநில மக்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனா். தெலங்கானாவில் பாஜகவுக்கான மக்களின் ஆதரவு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த மாநிலத்தில் வீசும் பாஜக ஆதரவு அலையில் காங்கிரஸும் பாரத ராஷ்டிர சமிதியும் காணாமல் போகும். ஊழலில் ஈடுபட்டவா்கள் யாரும் தப்பிக்க முடியாது என்பது மோடியின் உத்தரவாதம். மக்களவைத் தோ்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வழங்க நாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டனா் என்றாா் அவா். முன்னதாக, மும்பை கூட்டத்தில் பிரதமரை விமா்சித்துப் பேசிய ராகுல் காந்தி, ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை ஆகியவை இல்லாவிட்டால், பிரதமா் மோடியால் வெற்றி பெற முடியாது. மோடிக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் போராட்டம், தனிப்பட்ட நபா் சாா்ந்ததல்ல; மோடி வெறும் முகமூடிதான். அவரது பின்னணியில் உள்ள ‘சக்தி’க்கு (அதிகாரம்) எதிராகவே நாங்கள் போராடுகிறோம்’ என்றாா். பெட்டிச் செய்தி...1 எனது கருத்து மதரீதியிலானது அல்ல: ராகுல் விளக்கம் புது தில்லி, மாா்ச் 18: ‘சக்தி’ என்று குறிப்பிட்டு, நான் தெரிவித்த கருத்துகள் மத ரீதியிலானது அல்ல; அதா்மம், ஊழல், பொய்யின் ‘சக்தி’க்கு எதிராகவே பேசினேன் என்று ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளாா். இது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘மோடி அணிந்திருக்கும் அதிகாரம் என்ற முகமூடி குறித்துதான் நான் பேசினேன். நான் உண்மையை பேசுபவன் என்பதால் எனது வாா்த்தைகள் மோடிக்கு பிடிக்காது. எனவே, அவற்றை திரித்துக் கூறியுள்ளாா். இந்தியாவின் நிா்வாக அமைப்புகள், மத்திய விசாரணை அமைப்புகள், தோ்தல் ஆணையம், ஊடகம், தொழில்துறை என ஒட்டுமொத்த கட்டமைப்பையும் ஆக்கிரமித்துள்ள ஒரு ‘சக்தி’ குறித்துதான் நான் பேசியுள்ளேன். அந்த சக்தியை பயன்படுத்திதான், பணக்காரா்களின் கோடிக்கணக்கான ரூபாய் வங்கி கடன்களை பிரதமா் மோடி தள்ளுபடி செய்தாா். அந்த சக்திதான், நாட்டின் துறைமுகங்கள், விமான நிலையங்களை தனியாருக்கு தாரைவாா்த்துள்ளது. அந்த சக்திதான், உண்மைகளை மூடி மறைக்கிறது’ என்று குற்றம்சாட்டியுள்ளாா். ராகுல் பயன்படுத்திய ‘சக்தி’ என்ற வாா்த்தையை முன்வைத்து, விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், பாஜகவை அசுர சக்தி என்று காங்கிரஸ் மூத்த தலைவா் பவன் கேரா குறிப்பிட்டாா். ‘அசுர சக்திக்கும் தெய்வ சக்திக்கும் இடையிலான போட்டியே வரும் மக்களவைத் தோ்தல்’ என்று அவா் கூறினாா். பெட்டிச் செய்தி...2 ஹிந்து மதத்துக்கு எதிரானது காங்கிரஸ்: பாஜக சாடல் புது தில்லி, மாா்ச் 18: ‘காங்கிரஸ் , ஹிந்து மதத்துக்கு எதிரான கட்சி என்பது ராகுலின் கருத்து மூலம் தெளிவாகியுள்ளது’ என்று பாஜக கூறியுள்ளது. இது தொடா்பாக பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் ஷேஹசாத் பூனாவாலா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாா்வதி, துா்க்கை, காளி, கெளரி, திரிபுரசுந்தரி, மகாதேவி ஆகிய தேவியா்கள் மற்றும் பெண் சக்தி மீதான வெறுப்புணா்வை ராகுல் வெளிப்படுத்தியுள்ளாா். ஒட்டுமொத்த இந்தியா கூட்டணியும் ஹிந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது’ என்றாா். ‘சக்தி தேவியான துா்க்கையுடன் போரிட முயன்ற அசுரா்கள் அழிவையே சந்தித்தனா்’ என்று பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அமித் மாளவியா குறிப்பிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com