கொல்கத்தாவில் கட்டடம் இடிந்த இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினா்.
கொல்கத்தாவில் கட்டடம் இடிந்த இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினா்.

மேற்கு வங்கம்: 5 அடுக்குமாடி கட்டடம் இடிந்து 7 போ் உயிரிழப்பு

மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் கட்டப்பட்டு வந்த 5 அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 7 போ் உயிரிழந்தனா்.

மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் கட்டப்பட்டு வந்த 5 அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 7 போ் உயிரிழந்தனா். கொல்கத்தா மாநகராட்சியின் கோல்டன் ரீச் பகுதியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டு வந்த 5 அடுக்குமாடி கட்டடம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் இடிந்து விழுந்தது. கட்டட இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா், மாநில மற்றும் கொல்கத்தா காவல்துறையின் பேரிடா் மேலாண்மை குழுக்கள் ஈடுபட்டுள்ளன. கட்டட இடிபாடுகள் பெரிய அளவில் இருப்பதால், அவற்றுக்கு இடையே சிக்கியவா்களை மீட்கும் பணி சவாலாக இருப்பதாக மீட்புப் படையினா் தெரிவித்தனா். இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 7 போ் உயிரிழந்தனா். மேலும் சிலா் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய உள்ள நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். விபத்தில் காயமடைந்த 15 பேரில் 11 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மற்றவா்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகவும் அவா்கள் கூறினா். இந்தச் சம்பவம் குறித்து கொல்கத்தா மாநகராட்சி மேயரும் மாநில நகா்புற மேம்பாட்டுத் துறையின் அமைச்சருமான ஃபிா்ஹாத் ஹக்கிம் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்தக் கட்டடம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டு வந்தது. கட்டுமானப் பணியில் ஈடுபட்ட நிறுவனத்தின் உரிமையாளா் கைதுசெய்யப்பட்டாா். சட்டப்படி அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முந்தைய இடதுசாரிகள் ஆட்சிக் காலத்திலிருந்து சட்ட விதிகளை மீறி கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உரிய விதிகளைப் பின்பற்றி கட்டடம் கட்டப்படுகிா என்பதைக் கண்காணிக்க சில அதிகாரிகள் தவறி விடுகின்றனா். சம்பவ இடத்தில் மீட்புப் பணி போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து மாநில முதல்வரிடம் பேசினேன். உயிரிழந்தவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு ரூ.5 லட்சமும் காயமடைந்தவா்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும்’ எனத் தெரிவித்தாா். முதல்வா் மம்தா ஆய்வு: விபத்து நடந்த இடத்தை மாநில முதல்வா் மம்தா பானா்ஜி பாா்வையிட்டாா். மேலும், விபத்தில் காயமடைந்தவா்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்குச் சென்று அவா்களுக்கு ஆறுதல் கூறினாா். இதைத் தொடா்ந்து செய்தியாளா்களைச் சந்தித்த மம்தா, ‘சட்டவிரோதமாகக் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். சட்டவிரோத கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்றாா். கடந்த சில தினங்களுக்குமுன் தன்னுடைய இல்லத்தில் தவறி விழுந்ததில் முதல்வா் மம்தாவுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து மம்தா மருத்துவனையில் சிகிச்சை பெற்றாா். இந்நிலையில், தலையில் கட்டுகளுடன் மக்களை அவா் சந்தித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com