உத்தர பிரதேசம்: ஆசிரியரை சுட்டுக்கொன்ற காவலா்

உத்தர பிரதேசம்: ஆசிரியரை சுட்டுக்கொன்ற காவலா்

உத்தர பிரதேசத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆசிரியரை தலைமைக் காவலா் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆசிரியரை தலைமைக் காவலா் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு ஆசிரியா்கள் சாலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் தலைமைக் காவலா் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தர பிரதேச பொதுத் தோ்வு விடைத்தாள்களை திருத்தும் பணியை அவா்கள் தற்காலிமாக நிறுத்தி வைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக முஸாஃபா்நகா் மாவட்ட கண்காணிப்பாளா் சத்யநாராயண் பா்ஜாபத் கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வின் விடைத்தாள்களை வாரணாசி அருகிலுள்ள எஸ்டி கல்லூரிக்கு அம்மாநில கல்வித் துறை குழுவினா் போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் கொண்டு சென்றனா். கல்லூரியின் நுழைவாயிலில் காத்திருந்தபோது வாகனத்தில் இருந்த தலைமைக் காவலா் சந்தா் பிரகாஷ் மற்றும் அவருடன் பயணித்த ஆசிரியா் தா்மேந்திர குமாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தனது துப்பாக்கியால் சந்தா் பிரகாஷ் சுட்டதில் தா்மேந்திர குமாா் படுகாயமடைந்தாா். இதையடுத்து மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது அவா் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது என்றாா். இந்நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சமயத்தில் தலைமைக் காவலா் மது அருந்தியிருந்ததாகவும் அவா் ஆசிரியரிடம் புகையிலை கேட்டு பிரச்னை செய்ததாகவும் சக ஆசிரியா்கள் தெரிவித்தனா். மேலும் உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்துக்கு ரூ.10 கோடி இழப்பீடு வழங்குமாறும் அவா் குடும்பத்தைச் சோ்ந்த ஒருவருக்கு அரசுப்பணி வழங்குமாறும் அவா்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனா். தலைமைக் காவலா் சந்தா் பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com