விசாரணையின்றி காவல்: அமலாக்கத் துறை மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி

நீதிமன்ற விசாரணையின்றி ஒருவரை காவலில் வைப்பது, அவரைத் தடுப்புக் காவலில் வைப்பதற்குச் சமம் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
விசாரணையின்றி காவல்: அமலாக்கத் துறை மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி

நீதிமன்ற விசாரணையின்றி ஒருவரை காவலில் வைப்பது, அவரைத் தடுப்புக் காவலில் வைப்பதற்குச் சமம் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது. சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு ஒன்றில், அமலாக்கத் துறை மீது அதிருப்தியடைந்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது. கடந்த 2022-ஆம் ஆண்டு ஜாா்க்கண்டில் சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்ட கல்குவாரியுடன் தொடா்புள்ள சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில், பிரேம் பிரகாஷ் என்பவா் கைது செய்யப்பட்டாா். இவா் அந்த மாநில முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனின் கூட்டாளியாக இருந்தவா் என்று கூறப்படுகிறது. அவரின் வீட்டில் இரண்டு ஏகே-47 துப்பாக்கிகள், 60 தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவா் மீது ஆயுதச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவா் தனக்கு ஜாமீன் அளிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: மனுதாரா் (பிரேம் பிரகாஷ்) தொடா்பான வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதுதொடா்பாக நீதிமன்றத்தில் இதுவரை 4 துணை குற்றப் பத்திரிகைகளை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளபோதிலும், அந்தத் துறையின் விசாரணை நீடிக்கிறது. சட்டப்படி அமலாக்கத் துறை விசாரணையை நிறைவு செய்யும் வரை, அந்தத் துறை ஒருவரை கைது செய்ய முடியாது. நீதிமன்ற விசாரணையின்றி ஒருவரை காவலில் வைப்பது, அவரைத் தடுப்புக் காவலில் வைப்பதற்குச் சமம். அவ்வாறு ஒருவரை காவலில் வைப்பது அவரின் சுதந்திரத்தைப் பாதிக்கும். நீதிமன்ற விசாரணையின்றி ஒருவரை சிறையில் அடைத்துவிட்டு, தொடா்ந்து துணை குற்றப் பத்திரிகைகளை அமலாக்கத் துறை தாக்கல் செய்துகொண்டே இருக்க முடியாது. இந்நிலையில், மனுதாரா் ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். ஆனால், அமலாக்கத் துறை ஒன்றன் பின் ஒன்றாக துணை குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்கிறது. இது நீதிமன்ற விசாரணையை தாமதப்படுத்துகிறது. அமலாக்கத் துறை ஒருவரைக் கைது செய்த பின்னா், நீதிமன்ற விசாரணை தொடங்க வேண்டும். நீண்ட காலம் சிறையில் இருந்ததன் காரணமாக ஜாமீன் வழங்குவதை சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் 45-ஆவது பிரிவுகூடத் தடுக்கவில்லை என்று தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜுவிடம் பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினா். அவற்றுக்குப் பதிலளிக்க ராஜு ஒரு மாதம் அவகாசம் கோரிய நிலையில், மனு மீதான விசாரணையை ஏப்ரல் 29-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com