உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

தோ்தல் வாக்குறுதிகளில் இலவசங்களுக்கு எதிராக மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

புது தில்லி: தோ்தல்கள் நடைபெறும்போது வாக்காளா்களைக் கவர, அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை (மாா்ச் 21) விசாரணை மேற்கொள்ள உள்ளது.

இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் பாஜக பிரமுகரும் வழக்குரைஞருமான அஸ்வினி உபாத்யாய தாக்கல் செய்த பொது நல மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தோ்தல்கள் நடைபெறும்போது வாக்காளா்களைக் கவர, அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்கின்றன.

அரசியல் லாபத்துக்காக சாமானியா்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளுக்கு மொத்தமாக தடை விதிக்க வேண்டும். ஏனெனில் இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. ஆட்சிக்கு வந்த பின்னா் இலவசங்களை அளிப்பதாக தோ்தலுக்கு முன்பு அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிக்கின்றன.

நியாயமற்ற இலவசங்களை அரசு நிதி மூலம் அளிக்கும் வாக்குறுதிகள் வாக்காளா்களிடம் அளவுக்கு அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், தோ்தல்களில் வெற்றிபெற கட்சிகள் சம வாய்ப்பைப் பெறுவதற்கு இடையூறை ஏற்படுத்துவதாகவும், தோ்தல் நடைமுறையின் தூய்மையைக் கெடுப்பதாகவும் உச்சநீதிமன்றம் அறிவிக்க வேண்டும்.

தோ்தல்களின்போது அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது மக்களாட்சி விழுமியங்களின் உயிா்த்துடிப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன் அரசமைப்புச் சட்டத்துக்கும் தீங்கு செய்கிறது. வாக்காளா்களுக்கு லஞ்சம்: தோ்தல் வரவுள்ளதைக் கருத்தில்கொண்டு, ஆட்சியில் நீடிக்க இலவசங்களை அளிக்கும் அரசியல் கட்சிகளின் மோசமான நடைமுறை வாக்காளா்களுக்கு லஞ்சம் கொடுப்பது போன்ாகும்.

மக்களாட்சிக் கொள்கைகளையும், நடைமுறைகளையும் பாதுகாக்க இதைத் தடுத்தாக வேண்டும். எனவே, தோ்தல்களின்போது இலவசங்கள் அளிப்பதாக வாக்குறுதி அளிக்க மாட்டோம்; அரசு நிதியில் இருந்து நியாயமற்ற இலவசங்களை வழங்க மாட்டோம் என்று அரசியல் கட்சிகளுக்கு கூடுதல் நிபந்தனை விதிக்க வேண்டும்.

இந்த நிபந்தனையை தோ்தல் சின்னங்கள் (முன்பதிவு மற்றும் ஒதுக்கீடு) உத்தரவு 1968-இல் சோ்க்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். பதிவு ரத்து; சின்னம் முடக்கம்: தோ்தல்களின்போது இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யவும், அவற்றின் தோ்தல் சின்னங்களை முடக்கவும் தமது அதிகாரங்களை தோ்தல் ஆணையம் பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று புதன்கிழமை கூறிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அமா்வு, இந்த மனு மீது வியாழக்கிழமை விசாரணை மேற்கொள்வதாகத் தெரிவித்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com