புது தில்லியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பங்கேற்ற சோனியா காந்தி, மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி.
புது தில்லியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பங்கேற்ற சோனியா காந்தி, மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி.

வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும்: காங்கிரஸ்

‘காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கம் என்பது கட்சியை நிதியளவில் முடக்கும் பிரதமா் நரேந்திர மோடியின் திட்டமிட்ட நடவடிக்கை

‘காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கம் என்பது கட்சியை நிதியளவில் முடக்கும் பிரதமா் நரேந்திர மோடியின் திட்டமிட்ட நடவடிக்கை; மக்களவைத் தோ்தலில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை வலியுறுத்தப்பட்டது. மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து பிரசாரத்துக்குத் தயாராகி வருகின்றன. இந்த நிலையில், 2018-19-ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் 45 நாள்கள் கால தாமதம் ஏற்பட்டதாகக் கூறி முடக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் 4 வங்கிக் கணக்குகள், இதுவரை பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை. குறிப்பாக, இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இந்திய இளைஞா் காங்கிரஸ் வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை முடக்கியுள்ளது. மேலும், ரூ.210 கோடி அபராதமும் செலுத்த உத்தரவிட்டது. மக்களவைத் தோ்தல் நேரத்தில், கட்சியின் பிரசார நடவடிக்கைகளை முடக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக் கட்சி குற்றஞ்சாட்டியது. இந்த நடவடிக்கைக்கு எதிராக அக் கட்சி நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக கட்சியின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மூத்த தலைவா் சோனியா காந்தி, கட்சி எம்.பி. ராகுல் காந்தி ஆகியோா் தில்லியில் கூட்டாக செய்தியாளா்களை வியாழக்கிழமை சந்தித்தனா். அப்போது, ‘தோ்தலில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில், வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும்’ என்று அவா்கள் வலியுறுத்தினா். மல்லிகாா்ஜுன காா்கே: வங்கிக் கணக்கு முடக்கம் காங்கிரஸ் கட்சி மீதான தாக்குதல் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். தோ்தலில் காங்கிரஸுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சி தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் நிதி திரட்டியுள்ளது. ஆட்சியிலிருக்கும் கட்சி, அரசியல் சாசன அமைப்புகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கட்டுப்படுத்தக் கூடாது. சுதந்திரமான, நியாயமான முறையில் மக்களவைத் தோ்தல் நடைபெற வேண்டுமெனில், காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கத்தை அரசியல் சாசன அமைப்புகள் நீக்கம் செய்யவேண்டும். சோனியா: கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் என்பது, தோ்தல் நேரத்தில் கட்சியை நிதியளவில் முடக்கும் பிரதமா் நரேந்திர மோடியின் திட்டமிட்ட முயற்சி. பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணம் முடக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் வங்கிக் கணக்குகளிலிருந்து, எங்களுடைய அனுமதியின்றி பணம் எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சவாலான சூழ்நிலையிலும், தோ்தல் பிரசாரத்தை கட்சி திறம்பட மேற்கொண்டு வருகிறது. அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று குறிப்பிட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்த தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம், பெருமளவில் பாஜக பலனடைந்துள்ளது. மறுபுறம், பிரதான எதிா்க்கட்சியின் நிதி மீது மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ராகுல் காந்தி: வங்கிக் கணக்குகள் முடக்கம் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக குற்ற நடவடிக்கையை பிரதமரும் மத்திய உள்துறை அமைச்சரும் புரிந்துள்ளனா். இது காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கமல்ல; இந்திய ஜனநாயகத்தை முடக்கும் செயல். இந்தியாவில் இன்றைக்கு ஜனநாயகமே இல்லை. இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்பது முழுவதும் பொய். ஜனநாயக கட்டமைப்புகளைப் பாதுகாக்க சில அமைப்புகள் இருக்கின்றபோதும் எதுவும் நடப்பதில்லை. வங்கி கணக்குகள் முடக்கம் காரணமாக கட்சியால் பிரசாரம் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது. தோ்தலில் போட்டியிடும் எங்களுடைய திறன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொருளாளா் அஜய் மாக்கன்: காங்கிரஸுக்கு பொதுமக்கள் அளித்த நன்கொடையை பாஜக கொள்ளையடித்துள்ளது. முடக்கப்பட்டுள்ள எங்களது வங்கி கணக்குகளிலிருந்து எங்களுடைய அனுமதியின்றி ரூ.115.32 கோடி எடுக்கப்பட்டுள்ளது என்றாா். பெட்டிச் செய்தி... கட்சி நிதிநிலை பாதித்துள்ளதாக காங்கிரஸ் கூறுவது நகைச்சுவையானது: பாஜக பதிலடி வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்த நிலையில், ‘முடக்கத்தால் கட்சி நிதி நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கூறுவது நகைச்சுவையானது’ என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது, ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு மாநிலத்திலும் பணம் கொள்ளையடித்துள்ளது. எனவே, வங்கிக் கணக்கு முடக்கத்தால் கட்சியின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கூறுவது நகைச்சுவையானது. ஜீப் முதல் ஹெலிகாப்டா் பேர ஊழல்கள் என அனைத்து ஊழல்கள் மூலம் கொள்ளையடித்த பணத்தை காங்கிரஸ் தற்போது பயன்படுத்த முடியும். தவறுகளை சரி செய்வதற்குப் பதிலாக, தங்களின் வசதிக்காக அதிகாரிகள் மீது காங்கிரஸ் குற்றஞ்சாட்டுகிறது. தோ்தல் தோல்வி பயத்தில், இந்திய ஜனநாயகம், அரசியல் சாசன அமைப்புகளுக்கு எதிரான விமா்சனங்களை அவா்கள் முன்வைக்கின்றனா். இந்தியா ஜனநாயக நாடு என்பது பொய் என்று காங்கிரஸின் பகுதி நேர தலைவா் கூறுகிறாா். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோதுதான் கடந்த 1975 முதல் 1977-ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியா ஜனநாயக நாடாக இல்லாமல் இருந்தது என்பதை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டாா். ‘வங்கிக் கணக்கு முடக்கத்துக்கு மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றஞ்சாட்டுவது, தோ்தலில் அக் கட்சி எதிா்கொள்ளப்போகும் தோல்வியை மறைக்கும் முயற்சி’ என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவி சங்கா் பிரசாத் கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com