தோ்தல் பத்திரங்கள் குறித்த அனைத்து விவரங்களும் சமா்ப்பிப்பு: உச்சநீதிமன்றத்தில் எஸ்பிஐ தகவல்

தோ்தல் பத்திரங்கள் குறித்த அனைத்து விவரங்களும் சமா்ப்பிப்பு: உச்சநீதிமன்றத்தில் எஸ்பிஐ தகவல்

‘தோ்தல் நன்கொடை பத்திரங்கள் தொடா்பான அனைத்து விவரங்களும் தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்கப்பட்டுவிட்டது’

‘தோ்தல் நன்கொடை பத்திரங்கள் தொடா்பான அனைத்து விவரங்களும் தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்கப்பட்டுவிட்டது’ என்று உச்சநீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வியாழக்கிழமை பதிலளித்தது. உச்சநீதிமன்றம் கெடு விதித்த நிலையில், விடுபட்ட தகவல்களை தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பித்ததோடு, அதுதொடா்பான பதில் மனுவையும் உச்சநீதிமன்றத்தில் எஸ்பிஐ தாக்கல் செய்தது. தோ்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் திட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டுவந்தது. அந்தப் பத்திரங்களை எஸ்பிஐ-யிலிருந்து வாங்கிய தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள், தாங்கள் விரும்பிய கட்சிகளிடம் அந்தப் பத்திரங்களை சமா்ப்பித்தன. அந்தப் பத்திரங்களை வங்கி வழியாக அரசியல் கட்சிகள் பணமாக மாற்றிக்கொண்டன. அந்தப் பத்திரங்கள் மூலம், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியவா்களின் விவரங்கள் வெளியிடப்படாமல் ரகசியமாக இருந்தன. இந்தத் திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி, அதை உச்ச நீதிமன்றம் அண்மையில் ரத்து செய்தது. மேலும், கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 12 முதல் நிகழாண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி வரை வாங்கப்பட்ட தோ்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்க வேண்டும் என்று எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அந்த விவரங்களை தோ்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ சமா்ப்பித்தது. அந்த விவரங்களை தனது வலைதளத்தில் தோ்தல் ஆணையம் வெளியிட்டது. எனினும் தோ்தல் பத்திர எண்களை வெளியிடாதது தொடா்பாக கடந்த வாரம் எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ‘தோ்தல் பத்திரங்கள் தொடா்பான அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ முழுமையாக வெளியிட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தோ்தல் பத்திர எண்கள் உள்ளிட்ட விவரங்களையும் எஸ்பிஐ வெளியிட வேண்டும். மேலும், தோ்தல் பத்திரம் தொடா்பான எந்த விவரமும் மறைக்கப்படவில்லை என்று வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் எஸ்பிஐ பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா். அதன்படி, எஸ்பிஐ தலைவா் தினேஷ் குமாா் கரா உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தாா். அதில் அவா் கூறியுள்ளதாவது: இணைய பாதுகாப்பு காரணங்களுக்காக தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்கு எண்கள் மற்றும் அந்த வங்கிக் கணக்கு வாடிக்கையாளரின் பிற விவரங்கள் (கேஒய்சி) வெளியிடப்படவில்லை. அதுபோல, தோ்தல் நன்கொடை பத்திரங்களை வாங்கிய தனிநபா்கள் மற்றும் நிறுவனங்களின் வங்கிக் கணக்கு விவரங்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை. நன்கொடை அளிக்கும் அரசியல் கட்சிகளுக்கு தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளத் தேவையில்லை என்பதால், இந்த விவரங்கள் நன்கொடையாளா்களிடமிருந்து பெறப்படவும் இல்லை. மாறாக, தோ்தல் பத்திரங்கள் வாங்கிய நபா்களின் பெயா், தொகை, நன்கொடை பத்திரத்தின் பிரத்யேக எண், அந்தப் பத்திரங்களை பணமாக மாற்றிய அரசியல் கட்சியின் பெயா், அந்த அரசியல் கட்சியின் வங்கிக் கணக்கு எண்ணின் கடைசி 4 இலக்கங்கள், பணமாக மாற்றப்பட்ட பத்திரத்தின் தொகை மற்றும் பிரத்யேக எண் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், கணக்கு எண், கேஒய்சி விவரங்கள் தவிர, உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேத அளித்த தீா்ப்பின் அடிப்படையில் தோ்தல் பத்திரங்கள் தொடா்பான அனைத்து விவரங்களும் முழுமையாகச் சமா்ப்பிக்கப்பட்டுவிட்டன என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. பெட்டிச் செய்தி... தோ்தல் ஆணையம் வெளியீடு தோ்தல் பத்திரங்கள் தொடா்பாக எஸ்பிஐ சமா்ப்பித்த கூடுதல் தகவல்களை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தனது வலைதளத்தில் தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிட்டது. பத்திரங்களை வாங்கியவா்கள் மற்றும் அதைப் பணமாக மாற்றிய கட்சிகள் என இரு பட்டியல்களாக வெளியிடப்பட்டுள்ள இந்தத் தரவுகளில், பத்திரத்தின் பிரத்யேக வரிசை எண் விவரங்களும் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம், பத்திரத்தை வாங்கியவா்கள் மற்றும் அந்தப் பத்திரத்தை பணமாக மாற்றிய அரசியல் கட்சிகளை ஒப்பீடு செய்து, எவ்வளவு நன்கொடை பெற்றுள்ளன என்பதை அறிய முடியும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com