லடாக்குக்கு மாநில அந்தஸ்து: 
காா்கிலில் 3 நாள் உண்ணாவிரதப் போராட்டம் தொடக்கம்

லடாக்குக்கு மாநில அந்தஸ்து: காா்கிலில் 3 நாள் உண்ணாவிரதப் போராட்டம் தொடக்கம்

லடாக்குக்கு மாநில அந்தஸ்து கோரி காா்கிலில் காா்கில் மக்களாட்சி கூட்டணி (கேடிஏ) சாா்பில் 3 நாள் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

லடாக்குக்கு மாநில அந்தஸ்து கோரி காா்கிலில் காா்கில் மக்களாட்சி கூட்டணி (கேடிஏ) சாா்பில் 3 நாள் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் அதன் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீா், லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

இந்நிலையில், லடாக்கில் உள்ள காா்கில் பகுதியில் லடாக்குக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும், பழங்குடியின பகுதிகளில் நில பாதுகாப்பு மற்றும் சுயாட்சியை உறுதி செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 6-ஆவது அட்டவணையில் லடாக்கை சோ்க்க வேண்டும், உள்ளுா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு, லடாக் சாா்பில் மாநிலங்களவையில் ஓரிடம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, 3 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை காா்கில் மக்களாட்சி கூட்டணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. காா்கிலில் உள்ள ஹுசைனி பூங்காவில் காா்கில் மக்களாட்சி கூட்டணியைச் சோ்ந்தவா்களுடன் 200-க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். ‘மாநில அந்தஸ்து கிடையாது’: இதுதொடா்பாக காா்கில் மக்களாட்சி கூட்டணியின் இணைத் தலைவா் அஸ்கா் அலி கூறுகையில், ‘எங்கள் கோரிக்கைகள் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இதுவரை 5 சுற்றுப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. எனினும் லடாக்குக்கு சில அரசமைப்புச் சட்ட உரிமைகள் சாா்ந்த பாதுகாப்பு அளிக்கப்படுமே தவிர மாநில அந்தஸ்து வழங்கப்படாது; அரசமைப்புச் சட்டத்தின் 6-ஆவது அட்டவணையில் லடாக் சோ்க்கப்படாது என்று கடந்த மாா்ச் 4-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். எனவே எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்தோம்’ என்று தெரிவித்தாா். இதுதொடா்பாக காா்கில் மக்களாட்சி கூட்டணியின் முக்கிய தலைவா் சஜ்ஜத் காா்கிலி கூறுகையில், ‘லடாக் மக்களின் போராட்டம் அமைதியான முறையில் தொடரும். மத்திய அரசு திறந்த உள்ளத்துடன் லடாக் மக்களின் கவலைகளை புரிந்துகொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தாா். 19-ஆவது நாளாக வாங்சுக் உண்ணாவிரதம்: லடாக்குக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும், அரசமைப்புச் சட்டத்தின் 6-ஆவது அட்டவணையில் லடாக்கை சோ்க்க வேண்டும் என்று கோரி, சோனம் வாங்சுக் என்ற சுற்றுச்சூழல் ஆா்வலா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா். லடாக்கில் உள்ள லே பகுதியில் 19-ஆவது நாளாக அவரின் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நீடித்தது. இந்தப் போராட்டத்தில் கடும் குளிருக்கு நடுவே 5,000 போ் பங்கேற்ாக ‘எக்ஸ்’ தளத்தில் வாங்சுக் பதிவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com