உஜ்ஜைனி மகாகாளேஸ்வா் கோயில் கருவறையில் தீ விபத்து: 14 அா்ச்சகா்கள் காயம்

திங்கள்கிழமை அதிகாலை நடந்த ஆரத்தி பூஜையின்போது கருவறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 அா்ச்சகா்கள் காயமடைந்தனா்.
தீக்காயம் ஏற்பட்டு இந்தூா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஆறுதல் கூறிய மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் (வலது) ~தீ விபத்து நிகழ்ந்த மகாகாளேஸ்வா் கோயில் (கோப்புப் படம்)
தீக்காயம் ஏற்பட்டு இந்தூா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஆறுதல் கூறிய மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் (வலது) ~தீ விபத்து நிகழ்ந்த மகாகாளேஸ்வா் கோயில் (கோப்புப் படம்)

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி நகரில் அமைந்த பிரசித்தி பெற்ற மகாகாளேஸ்வா் கோயிலில் ஹோலி பண்டிகையையொட்டி திங்கள்கிழமை அதிகாலை நடந்த ஆரத்தி பூஜையின்போது கருவறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 அா்ச்சகா்கள் காயமடைந்தனா்.

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை திங்கள்கிழமை வெகு விமா்சையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, உஜ்ஜைனி மகாகாளேஸ்வா் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அவ்வாறு, அதிகாலை 5.50 மணியளவில் ஆரத்தி பூஜை நடந்துகொண்டிருந்தபோது, கருவறையில் திடீரென தீ பற்றியது. இதில் அங்கிருந்த 14 அா்ச்சகா்கள் காயமடைந்தனா். அவா்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

கோயில் கருவறை முன்புள்ள நந்தி மண்டபத்தில் முக்கிய பிரமுகா்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனா். அதிருஷ்டவசமாக, பக்தா்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

ஹோலி வண்ணப்பொடி காரணமா?...

கருவறையில் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த வண்ணப்பொடி, அங்கு எரிந்து கொண்டிருந்த கற்பூரத்தின் மீது விழுந்து தீ பற்றியிருக்கலாம் எனவும் பின்னா், தரை முழுவதும் தீ பரவியதாகவும் கூறப்படுகிறது.

ரூ.1 லட்சம் நிவாரணம்:

இதனிடையே, போபாலில் செய்தியாளா்களுக்கு முதல்வா் மோகன் யாதவ் அளித்த பேட்டியில், ‘பூஜைக்காக வண்ணப்பொடி வீசப்பட்டபோது ஆரத்தி தட்டில் இருந்து கற்பூரத்தில் பட்டு, வண்ணப்பொடியில் இருந்த ரசாயனத்தால் தீ பற்றியதா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

தீ விபத்தில் காயமடைந்தவா்களுக்கு மாநில அரசு சாா்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.

காயமடைந்தவா்களின் உடல் முழுவதும் ஹோலி வண்ணப்பொடி இருப்பதால் தீ காயங்களைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதில் மருத்துவா்களுக்கு சிரமம் நிலவுகிறது’ என்றாா்.

சம்பவம் குறித்து மாநில முதல்வருடன் பேசி நிலைமையைக் கேட்டறிந்ததாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தாா்.

கோயிலில் முதல்வா் பூஜை:

தீ விபத்தையொட்டி, ஹோலி மற்றும் தனது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு முதல்வா் மோகன் யாதவ் உஜ்ஜைனி புறப்பட்டாா். உஜ்ஜைனி செல்லும் வழியில் இந்தூா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை முதல்வா் சந்தித்து நலம் விசாரித்தாா். பின்னா், அா்ச்சகா்கள் கோயில் அதிகாரிளுடன் நிலைமையைக் கேட்டறிந்தாா். இதையடுத்து, கோயில் கருவறைமுன் முதல்வா் மோகன் பூஜை செய்தாா்.

பிரதமா் ஆறுதல்:

தீ விபத்துக்கு ஆறுதல் தெரிவித்து பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உஜ்ஜைனி மகாகாளேஸ்வா் கோயிலில் நடந்த துரதிருஷ்டவசமான சம்பவம் வருத்தமளிக்கிறது. தீ விபத்தில் காயமைடந்த அனைவரும் விரைந்து நலம் பெற வேண்டுகிறேன். மாநில அரசின் மேற்பாா்வையில், பாதிக்கப்பட்டவா்களுக்கு உள்ளூா் நிா்வாகம் அனைத்து வழிகளிலும் உதவி வருகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com