வயநாட்டில் பலத்த போட்டி! ராகுலை எதிர்க்கும் முக்கிய தலைவர்கள்

வயநாட்டில் ராகுலை எதிர்த்து கேரள பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வயநாடு தொகுதி வேட்பாளர்கள் ராகுல் காந்தி(காங்.), சுரேந்திரன்(பாஜக), ஆனி ராஜா(சிபிஐ)
வயநாடு தொகுதி வேட்பாளர்கள் ராகுல் காந்தி(காங்.), சுரேந்திரன்(பாஜக), ஆனி ராஜா(சிபிஐ)

கேரளத்தில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கடந்த மக்களவைத் தேர்தலில் பெருவெற்றியைப் பெற்றுத் தந்த வயநாடு தொகுதியில் இம்முறை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக மீண்டும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து இந்தியா கூட்டணியில் உள்ள இடதுசாரிகள் சார்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஆனி ராஜா வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

‘இந்தியா’ கூட்டணியில் மக்களவைத் தேர்தலை சந்திக்க இருக்கும் காங்கிரஸும், இடதுசாரி கட்சிகளும் கேரளத்தில் எதிரெதிரே போட்டியிடவுள்ளதால் வயநாடு தொகுதி பக்கம் அனைவரது கவனமும் சென்றது.

இதனிடையே, கேரளத்தில் வயநாடு உள்பட 4 மக்களவைத் தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், மீதமுள்ள 4 வேட்பாளா்கள் யார் என்பதை பாஜக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

அதில் வயநாட்டில் ராகுலை எதிர்த்து கேரள பாஜக மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் போட்டியிடுவார் எனத் அறிவிக்கப்பட்டுள்ளதால் வயநாடு தொகுதியில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது, வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமேதியின் தோல்வியை சந்தித்தாலும், வயநாட்டில் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.இதனைத் தொடர்ந்து, கடந்த 5 ஆண்டுகளாக வயநாடு தொகுதி காங்கிரஸின் கோட்டையாக திகழ்கிறது. இதே தொகுதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டியிடுவதால் அவருக்கான வெற்றி வாய்ப்பு அதிகம் என்றே கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அவரை எதிர்த்து வயநாடு தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர்களுக்கும் இம்முறை வெற்றி பெற அதிகம் வாய்ப்பிருப்பதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பொதுச் செயலருமான டி.ராஜாவின் மனைவி என்பதும், அங்கு போட்டியிடும் ஒரே பெண் வேட்பாளர் என்பதும் ஆனி ராஜாவுக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2020-ஆம் அண்டு முதல் கேரள பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பில் உள்ளார் கே. சுரேந்திரன். சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னின்று நடத்தியதால் மக்களிடையே நன்கு அறிமுகமானவர். வயநாடு மாவட்ட பாரதிய யுவ மோர்ச்சா தலைவராக இருந்ததும் அவருக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com